சிறையில் இருக்கும் சரவணபவன் ராஜகோபால் கவலைக்கிடம்! காரணம் ஜீவஜோதியா?

தமிழகத்தின் பிரபல சரவணபவன் ஹோட்டலின் உரிமையாளர் ராஜகோபால். இவருக்கு ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உண்டு.


தொழிலில் கொடிகட்டி பறந்து வந்த இவர் சில சறுக்கல்களை சந்தித்தார். இதனால் ஒரு ஜோதிடரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொண்டார் அதில், சிறு வயது பெண்ணை  மூன்றாவதாக திருமணம் செய்தால் வாழ்வில் ஏற்றம் ஏற்படும் என்று ஜோதிடர் தெரிவிக்க,  தனது ஹோட்டலில் மேலாளராக பணியாற்றியவரின் மகள் ஜீவஜோதியை திருமணம் செய்ய நினைத்தார். ஆனால் ஜீவஜோதி ஏற்கனவே சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்திருந்தார். 

இருப்பினும் ஜீவஜோதியை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற நோக்கில், சாந்தகுமாரை கூலிப்படை மூலம் கடத்திச் சென்று கொடைக்கானலில் வைத்து கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சரவணபவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த டேனியல் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதில் முக்கிய குற்றவாளியான ராஜகோபாலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அவர் சற்றும் எதிர்பார்க்காதவாறு  அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. அதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடினார் ராஜகோபால், உச்சநீதிமன்றமும் அவரை கைவிரித்ததோடு, ஜூலை 7ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்படி ஆயுள் தண்டனையை ஏற்றுக் கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் சரண் அடைந்த அவர் உடல்நலக்குறைவினால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக ஸ்டான்லி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு ராஜகோபாலின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். மேலும் அவருக்கான சிறை தண்டனையை நிறுத்தி வைத்து மருத்துவமனையில் சிகிச்சையை தீவிரமாக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனிடையே ஜீவஜோதியன் சாபம் காரணமாகவே தற்போது ராஜகோபால் துயரங்களுக்கு ஆளாகி வருவதாக சிலர் பேசிச் செல்கின்றனர்.