ஆதரவு தெரிவிக்க சென்ற சரத்! வாசலோடு திருப்பி அனுப்பிய எடப்பாடி!

நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவிக்க சென்ற சரத்குமாரை வீட்டு வாசலோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருப்பி அனுப்பியுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்து எந்த தேர்தல் பணிகளும் செய்யாமல் வீட்டில் அமைதியாக உட்கார்ந்து இருந்தார் சரத்குமார். அவரை நேரில் சென்று சந்தித்து அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு ஓபிஎஸ் மற்றும் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டனர்.

இதனையடுத்து இன்று காலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சரத்குமார் சென்றார். வழக்கமாக வீட்டிற்கு வரும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கட்சிக்காரர்களை சந்திக்க தனியாக ஒரு அறை உண்டு.

சரத்குமார் வருகை தந்த தகவலறிந்த எடப்பாடி பழனிசாமி நேராக வீட்டுக்கு வெளியே வந்து வாசலில் நின்று கொண்டார். பிறகு சரத்குமார் தான் கையோடு கொண்டு வந்திருந்த சால்வையை எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்தார்.

சிரித்த முகத்துடன் அதனை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி பிறகு சரத்குமாருக்கும் ஒரு சால்வை அணிவித்துவிட்டு வழியனுப்பி வைத்தார். அதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வீட்டுக்குள் கூட அனுமதிக்கவில்லை.

ஆதரவு தெரிவிக்க வந்த சரத்குமாரிடம் வீட்டு வாசலிலேயே ஆதரவைப் பெற்றுக் கொண்டு அப்படியே திருப்பி அனுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. வேறு வழியில்லாமல் சரத்குமாரும் வீட்டு வாசலிலேயே ஆதரவை தெரிவித்து விட்டு வந்த வழியே புறப்பட்டார்.