ஈரோடு - சேலம் இடையே ரயில்களில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் கும்பல் மும்பையை சேர்ந்த தக் தக் கேங்காக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
சேலத்தை கலக்கும் தக் தக் கேங்! ரயிலில் பெண் பயணிகளை குலை நடுங்க வைக்கும் கொடூரம்!

ஈரோடு - சேலம் தடத்தில் மகுடஞ்சாவடி அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த இடத்தில் ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி, ஓடும் ரயிலில் ஏறும் கெள்ளையர்கள் பயணிகளிடம் கத்தியை காட்டி பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பினர்.
நேற்று முன் தினம் அதிகாலையில் 4 ரயில்களிலும் நேற்று அதிகாலையில் 2 ரயில்களிலும் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டினர். இதனால் ரயில்வே போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை போலீசாரைத் தாக்கிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
இதையடுத்து மகுடஞ்சாவடி பகுதியில் தண்டவாளம் நெடுகிலும் துப்பாக்கி ஏந்திய 500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இங்கு கொள்ளையர்கள் மும்பையில் செயல்படும் தக் தக் கொள்ளையர்களை போல் செயல்படுகின்றனர்.
ரயில் மற்றும் பேருந்துகளில் திடீரென ஏறும் 10 முதல் 20 பேர் பயணிகளை தாக்கிவிட்டு அவர்கள் வசம் இருக்கும் பணத்தை பறித்துவிட்டு மின்னல்வேகத்தில் தப்புவது தக் தக் கேங். அவர்கள் மகுடஞ்சாவடி வந்திருக்கலாம் என்கிற ஐயத்தில் அதிகாரிகளும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.