ஏர் கம்ப்ரசர் வெடித்து துண்டான சிறுவனின் கை! மீண்டும் ஒட்ட வைத்து சாதித்த சேலம் அரசு மருத்துவர்கள்! நெகிழ்ந்த பெற்றோர்!

சேலத்தில் விபத்து ஒன்றில் துண்டான கையை மீண்டும் சிறுவனுக்கு பொருத்தி சேலம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


சேலம் ஐந்து ரோடு பகுதியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் மவுலீஸ்வரன் கடந்த வாரம் விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த பஞ்சர் போடும் கடையில் காற்றுப் பிடிக்கும் இயந்திரம் அழுத்தம் தாங்காமல் வெடித்துள்ளது. அப்போது அந்த காற்றின் வேகத்தால் தூக்கி வீசப்பட்ட இரும்புத் தகரம் ஒன்று வேகமாக பறந்து வந்து சிறுவன் மவுலீஸ்வரனின் கையை துண்டாக்கியது.   

இதையடுத்து கை துண்டான நிலையில் வலி தாங்கமால் அலறித் துடித்த மவுலீஸ்வரன் அக்கம் பக்கத்தினரால் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டால் துண்டான கையின் ஒரு பகுதியும் பிளாஸ்டிக் பை ஒன்றில் போட்டு, ஐஸ் கட்டியைச் சுற்றி வைத்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.

சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சுமார் 11 மணி நேரம் போராடி துண்டான பகுதியை கையுடன் இணைத்து சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து கையை ஒட்ட வைத்த மருத்துவர்கள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள், கை வழக்கம்போல செயல்படும் என்றும் கூறியுள்ளனர்.

சிறுவனின் கை உரிய நேரத்தில் பெற்றோர் கொண்டு சென்றதால் சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கை பொருத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களின் சாதனைக்கு கூலித்தொழிலாளர்களான பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்