6 பேருடன் தொடங்கினேன்..! இன்று 70 பேருக்கு வேலை கொடுக்கிறேன்! SagTaur ராக்கி தீபக்கின் சாதனை பயணம்!

பல்வேறு தொழில்களில் பெண்கள் தங்கள் முன்னேற்றத்தை பிரதிபலித்து வரும் நிலையில் தற்போது சிசிடிவி கேமரா பொருத்தும் தொழிலில் சாதனை படைத்து வருகிறார் கேரள மாநிலத்தில் பிறந்து சென்னையில் தொழில் நடத்தி வரும் SagTaur Systems நிறுவனத்தின் உரிமையாளர் ராக்கி தீபக்.


கொச்சி அருகே கிராமத்தில் பிறந்தவர் ராக்கி. சிறு வயதிலேயே தந்தை பிரிந்து விட்டு சென்ற நிலையில் தாயின் அரவணைப்பில் அவரும், அவரது தம்பியும் படித்து வந்தனர். எம்.எஸ்.சி. முடித்து பின்னர் திருமணம் செய்து கொண்ட ராக்கி தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று விரும்பினார். 

சிசிடிவி பொருத்தித் தரும் நிறுவனமான `டைகோ’வில் விநியோகஸ்தர் உரிமையை வாங்கினார் ராக்கி. சி.சி.டி.வி கேமரா, தீத்தடுப்பு அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை விற்கும் விநியோகஸ்தராக படிப்படியாக முன்னேறினார் ராக்கி. இந்நிலையில் `டைகோ’ நிறுவனம், இந்தியா உள்ளிட்ட `சார்க்’ நாடுகளில் தனது தொழிலை திடீரென நிறுத்திக்கொண்டது. இதையடுத்து பெரும் நஷ்டத்தை சந்தித்தார் ராக்கி..

பின்னர் மீண்டும் சில லட்சங்களை முதலீடு செய்து சிசிடிவி கேமரா பொருத்துதல் மற்றும் சர்வீஸ் செய்யும் பணியை சொந்தமாகவே தொடங்கினார் ராக்கி. கார்ப்பரேட் நிறுவனங்கள், ஸ்டார் ஹோட்டல்கள், ஐ.டி பார்க் உள்ளிட்ட பெரு நிறுவனங்களின் ராக்கிக்கு கை கொடுக்க ஆரம்பித்தது.

தற்போது 70-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் முதலாளியாக, ஆண்டுக்கு 30 கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஈட்டி வருகிறார் ராக்கி. தவிர, 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பகுதி நேரப் பணியில் இருக்கிறார்கள். பல லட்சங்கள் செலவு செய்து வீடு, அலுவலகம் அமைப்பவர்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்து சிசிடிவி பொருத்தினால் அனைவரும் பாதுகாப்பாக வேலை செய்வார்கள் என கூறுகிறார் ராக்கி.