பாஜகவில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்! அவர் மகள் என்ன சொன்னார் தெரியுமா?

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ள சத்ருகன் சின்ஹா நீண்ட நாட்களுக்கு முன்பே இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என்று அவரின் மகளும், நடிகையுமான சோனாக்‌ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.


பாஜகவில் நீண்டகாலம் பணியாற்றியவர், மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா. பிஹாரின் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு 2 முறை எம்.பி. ஆனவர். ஆனால், கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து மோடி குறித்தும், ஆட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து வருகிறார் சத்ருகன் சின்ஹா.

இந்த நிலையில் சத்ருகன் சின்ஹா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்துப் பேசினார். முறைப்படி ஏப்ரல் 6-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பின் சத்ருகன் சின்ஹா ட்விட்டரில் வெளியிட்ட கருத்தில், "மிகுந்த வலியுடன் பாஜகவில் இருந்து வெளியேறுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சத்ருகன் சின்ஹா காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளது குறித்து அவரின் மகளும், நடிகையுமான சோனாக்ஷி சின்ஹா நிருபர்களுக்கு டெல்லியில் பேட்டி அளித்தார். ''என் தந்தை காங்கிரஸ் கட்சியில் இணைய எடுத்துள்ள முடிவை நீண்ட காலத்துக்கு முன்பே எடுத்திருக்க வேண்டும். மிக தாமதமாக எடுத்துள்ளார். ஜெயப்பிரகாஷ் நாராயண், வாஜ்பாய், அத்வானி ஆகியோர் காலத்தில் இருந்து என் தந்தை பாஜகவில் பணியாற்றி வருகிறார்.

கட்சியின் மீதும், தலைவர்கள் மீதும் என் தந்தை மிகுந்த மரியாதை வைத்திருந்தார். கட்சிக்குள்ளும் என் தந்தைக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக என் தந்தைக்கும், மூத்த தலைவருக்கும் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என சோனாக்‌ஷி சின்ஹா தெரிவித்தார்.