400கி.மீ..! 460 சிசிடிவி காட்சிகள்..! ஊரெல்லாம் கொள்ளை அடித்து நகை கடை அதிபரான நான்கு பேர்! திருப்பூர் திகுதிகு!

ஊர் ஊராக சென்று கொள்ளையடித்த நகைகளை திருப்பூரில் விற்பனை செய்து வந்த கொள்ளை கும்பலை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.


திருநெல்வேலி மாவட்டம் பி.எம் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இவரது வீட்டில் கடந்த டிசம்பர் மாதம் சுமார் 77 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து உடனே அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தடயங்களை சேகரித்துள்ளனர்.

அதில் கொள்லை நடைபெற்ற இடத்தில் எந்த ஒரு தடையம் மற்றும் கைரேகை எதுவும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அருகில் விசாரணை நடத்திய போது அடையாளம் தெரியாத சொகுசு கார் ஒன்று அந்த வழியாக வந்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு உள்ள வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர்.

அதில் போலி நம்பர் பிளேட்டுடன் சொகுசு கார் ஒன்று வந்ததை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். பின்னர் அந்த கார் எங்கு சென்றது என்பது குறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சுமார் 400 கிலோ மீட்டர் வரை பயணித்து அந்த வழியாக உள்ள அனைத்து கடைகளிலும் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டனர். சுமார் 460 வளாகங்களில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் பார்வையிட்டுள்ளனர்.

இதையடுத்து 100 கிலோமீட்டர் சென்ற உடனேயே அந்த கார் மாயமானது பின்னர் வேறொரு நம்பர் பிளேட்டுடன் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த கார் திருப்பூர் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் திருப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் காரை நிறுத்திவிட்டு கொள்ளையர்கள் உள்ளே சென்றுள்ளனர். இதையடுத்து அந்த ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியை காவல்துறையினர் பார்வையிட்டுள்ளனர்.

அதில் நான்கு நபர்கள் காரை விட்டு இறங்கி உள்ளே செல்வது பதிவாகி இருந்தது இதையடுத்து அவர்கள் யார் என்ற கோணத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர் திருப்பூரைச் சேர்ந்த குருவி சக்தி, ராமஜெயம், முகமது ரபீக், யாசர் அராபத் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது திருப்பூரில் மங்களம் நகைக்கடை என்ற பெயரில் நகைக் கடையை நடத்தி வருவதாகவும் கொள்ளையடித்த நகைகளை அங்கு வைத்து விற்பனை செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சொகுசு கார் மூலம் பூட்டியிருக்கும் வீடுகளை அடையாளம் வைத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அங்கு சென்று நகை மற்றும் பணத்தை கொள்லையடித்துவிடுவோம் என காவல்துறையினர் விசாரணையில் கொள்ளை கும்பல் ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் குல தெய்வ வழிபாட்டிற்காக நெல்லை வந்து அங்கு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.