எங்களுக்கும் பசிக்காதா? திருட வந்த வீட்டில் சுடச்சுட சமையல் செய்து சாப்பிட்ட திருடர்கள்! வாணியம்பாடி சம்பவம்!

வாணியம்பாடி அருகே தொழில் அதிபரின் வீட்டில் சாவகாசமாக திருடர்கள் உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வாணியம்பாடி சென்னாம்பேட்டை அருகே உள்ள தக்கடி தெருவை சேர்ந்தவர் பாருக் 50, இவர் வாணியம்பாடியில் சொந்தமாக தோல் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தனது குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு விசேஷத்திற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அங்கு திருட வந்த திருடர்களுக்கு வீட்டிலிருந்த பொருட்களை திருடியுள்ளனர். இந்நிலையில் அதிகாலை பாரூக் என்பவரின் வீடு திறந்து இருப்பதை பார்த்து பக்கத்து வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து செல்போனில் தொடர்பு கொண்டு பாரூக்கிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாரூக் உடனே அருகிலிருந்த தனது உறவினர்களை தனது வீட்டிற்கு சென்று பார்க்கும்படி செல்போனில் தெரிவித்துள்ளார்.  அப்போது உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது அவர்களது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 50 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பணம் திருடு போனது தெரியவந்தது.

இந்நிலையில் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது சமையலறையில் திருடர்கள் சமைத்து சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக திருடிச் சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது. பின்னர் இதுகுறித்து வாணியம்பாடி காவல்துறையினரிடம் உறவினர்கள் புகார் கொடுத்துள்ளனர்.இந்நிலையில் புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயம் ஏதேனும் கிடைக்குமா என்று தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நூதன முறையில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.