வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை என்று கூறி வன்முறையில் ஈடுபட்ட வாக்காளர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி கண்ணீர் புகை குண்டு வீச்சு என்று அந்த இடத்தையே கலவர பூமியாக மாற்றி விட்டனர்.
வாக்குப் பதிவின்போது கலவரம்! தடியடி! கண்ணீர் புகை வீச்சு! கலவர பூமியான தேர்தல் களம்!

இரண்டாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதிலும் டார்ஜலிங் தொகுதியில் வாக்குப் பதிவின்போது உச்சகட்ட பதற்றம் நிலவியது. காரணம் அந்த தொகுதிக்கு உட்பட்ட சோப்ரா எனும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்கள் பெயர் இல்லை என்று கூறி வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி தேசிய நெடுஞ்சாலையில் வாக்காளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசியதால் பதற்றம் உருவானது. வாக்காளர்களும் போலீசாரும் மோதிக் கொண்டதால் அந்த இடமே கலவர பூமியாக மாறியது. இதனையடுத்து துணை இராணுவம் தலையிட்டு கலவரத்தை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
ஆனால் அதற்குள் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து பரவத் தொடங்கியது. இதனை எடுத்து தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் வாக்காளர்களை போலீசாரும் துணை ராணுவத்தினரும் விரட்டினர். வாக்காளர்களும் பதிலடியில் இறங்கியதால் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசாரின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு போலீசார் வன்முறையை கட்டுப்படுத்தினார். இதன் காரணமாக டார்ஜிலிங் தொகுதியிலேயே பதற்றம் நிலவியது.