சிறையில் இருந்து நேற்று ரிலீஸ்! அவசர அவசரமாக கல்யாணம்! காதலனை கரம் பிடித்த நந்தினி!

2012-ல் மின்வெட்டுக்கு எதிராக நந்தினியின் தந்தை உண்ணாவிரதம் இருந்தபோது, தனியொரு மனுஷியாக போராடினார் நந்தினி.

அதுதான் அவரது முதல் போராட்டம். அப்போது மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் நேரடியாக நந்தினியிடம் பேசி கோரிக்கையை ஏற்றார்.சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி புத்தகங்களில் படித்திருப்போம். ஆனால், நாம் இப்போது நேரில் பார்க்கும் ஒரு போராளி நந்தினி மட்டும்தான். ஏன்னா, அவர் தனக்காக போராடவில்லை, இந்த சமூகத்திற்காக போராடுகிறார்.

சட்டக்கல்லூரி படிப்பை முடித்தபிறகும் நந்தினியால் நீதிமன்றத்தில் போய் வாதாட முடிவதில்லை, ஏனென்றால் அவர் மீது ஏகப்பட்ட வழக்குகள் வரிசை கட்டி நிற்கின்றன. மேலும், இவர் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் நிற்பதில்லை. அதனால்தான், கட்சியினரும் இவரை கண்டுகொள்வதில்லை. அதன்பிறகு போராட்டமே அவரது வாழ்க்கையாகிப் போனது. அப்பா, தங்கை, நந்தினி என மூவருமே போராளிகள்தான்.

2013ம் ஆண்டு முதல் மது ஒழிப்புப் போராளியாக இயங்கி வருகிறார் நந்தினி. அவர் கேட்கும் கேள்விக்கு எல்லோருக்கும் விடை தெரியும், ஆனால் அரசாங்கத்தால் அவரை கைது செய்யத்தான் முடியுமே தவிர, அவருக்குத் தீர்வு தர முடியாது. மதுவை ஒழிக்க வேண்டும், மதுவை அரசு விற்பது அராஜகம் என்பதுதான் அவரது முக்கியமான கோரிக்கை. அதுதான் அரசாங்கத்தால் ஏற்க முடியாததாக இருக்கிறது. அதனால் ஜூலை 5ம் தேதி திருமணம் நாள் குறிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு நேற்று இரவு ஜாமீனில் வெளிவந்த நந்தினி இன்று திருமணத்தை முடித்துக்கொண்டார்.

மதுரை மாவட்டம் தென்னமநல்லூர் கிராமத்தில் உள்ள நந்தினியின் குலதெய்வம் கோவிலில்  திருமணம் எளிமையான முறையில் இனிதே நடைபெற்றது. இவரை திருமணம் செய்திருக்கும் குணா ஜோதி பாசு, சென்னையைச் சேர்ந்த கணினி பொறியாளர். நந்தினியின் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவு தருபவர். 

இந்தத் திருமணத்துக்கு எந்த ஒரு தலைவரும், ஊர் பெரியவர்களும் கலந்துகொள்ளவில்லை, அதை நந்தினியும் எதிர்பார்க்கவில்லை. தம்பதியர் இனிதே வாழ வாழ்த்துவோம். 


More Recent News