நிதியை திருப்பியனுப்பிய தமிழக அரசு இருந்தா என்ன.. இல்லாட்டி என்ன? திருப்பி அனுப்பிட்டு மீண்டும் அங்கே போய் கையேந்துவாங்க!

மத்திய அரசு மூலம் தமிழக திட்டங்களுக்கு பணம் வருவதுண்டு.


அந்தப் பணத்தை முறைப்படி செலவு செய்யாமல், முழுமையாக ஆட்சியைக் காப்பாற்றவே நேரத்தை செலவிட்டதால், அது அப்படியே மீண்டும் மத்திய அரசுக்குத் திரும்பியிருக்கிறது. இது குறித்து ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை வெளியான பிறகுதான் தமிழகத்திற்கு விழிப்பு வந்தது. ஆனால், இதுவரை தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு விளக்கமோ, பதிலோ இல்லை என்பதுதான் வேதனை. இதுகுறித்து வேதனைப்படுகிறார் எழுத்தாளர் சாவித்திரி கண்ணன்.

இவர்களை நினைத்தாலே மனம் ரணமாகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைக்கென மத்திய அரசு தந்து கொண்டிருக்கும் நிதியோ யானைப்பசிக்கு சோளப்பொறி போல மிகவும் குறைவு தான். ஆனால், அதைக் கூட செலவழிக்க துப்பின்றி, மத்திய அரசுக்கே திருப்பி தந்துள்ளது தமிழக அரசு! இந்திய கணக்குத் தணிக்கை அதிகாரி சுட்டிக் காட்டியிருக்காவிட்டால் இதுவும் வெளியே தெரிந்திருக்காது.  விளிம்பு நிலை அடித்தள தலித் மக்களுக்கு வீடுகட்டித் தரும் திட்ட நிதி ரூ.2,355 கோடி திருப்பி அனுப்பபட்டுள்ளது.

கிராமப் பஞ்சாத்துகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தரப்பட்ட நிதியில் ரூ.758 கோடி திருப்பி அனுப்பபட்டுள்ளது! குடிநீருக்கு கூட வழியின்றி தவிக்கும் கிராமங்கள் எத்தனையெத்தனை! சிறப்பான வகையில் செயல்படும் பஞ்சாயத்துகளை ஊக்குவிக்க வழங்க வேண்டி நிதி ரூ.195 கோடி தரப்படாமல் திருப்பி அனுப்பபட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதி ரூ.248 கோடி திருப்பி தரப்பட்டுள்ளது.

மகளீர் சுய உதவி குழுக்களின் தொழிற் முயற்சிகளுக்கு தர வேண்டிய ஒரு பெரும் நிதி திரும்ப தரப்பட்டுள்ளது! தமிழக அரசு பள்ளிகளின் சிதிலமான கட்டிடங்களை சீரமைக்க, சுற்றுச் சுவர் இல்லாத பள்ளிகளுக்கு சுற்றுச் சுவர் எழுப்பித் தர,கழிவறைகள் கட்டித் தர, மேல் நிலை கல்வி வளர்ச்சிக்கு செலவிட வேண்டிய நிதியான ரூ.1627 கோடி திரும்ப அனுப்பட்டுள்ளது! .- எத்தையெத்தனை பள்ளிகளில் பிள்ளைகள் ஒன்னுக்கு, இரண்டுக்கு போகக் கூட வழியின்றி வீடு திரும்பும் வரை அடக்கி வைத்துப்படும் அவஸ்தைகள் கொஞ்சமா நஞ்சமா?

தேவைப்படும் இடங்களையும் ,பயனாளிகளையும் அடையாளம் காண முடியவில்லையாம்! இதற்காகத் தானே அவர்களுக்கு ஆட்சி செய்யும் வாய்ப்பு வழங்கபட்டுள்ளது. போயஸ் தோட்டத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதிலும், கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியை எழில்பட அமைப்பதிலும் பயன் பெறப் போகும் பயனாளிகளை மட்டும் எப்படி கண்டைந்தார்களாம்?

அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறாமல் எத்தனையெத்தனையோ எளிய, வறிய தமிழக மக்கள் தவித்துக் கிடக்க, நிர்வாகத் திரானியற்று செலவழிக்க வேண்டிய நிதியை இப்படித் திரும்ப அளிக்கும் ஆட்சியாளர்களை இனி திரும்பவே முடியாத நிலைக்கு நாம் அனுப்பினால் தான் என்ன என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.