ரிசர்வ் வங்கியின் 1.76 லட்சம் கோடி ரூபாய்! அரசுக்கு ஜாக்பாட்டா அல்லது ராகுல் சொல்வதுபோல் திருட்டுத்தனமா?

கடந்த ஆட்சி காலத்திலேயே ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையை வாங்கிவிட மோடியின் அரசு எவ்வளவோ முயற்சி செய்தது. ஆனால், அன்றைய ரிசர்வ் வங்கி கவர்னர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டனர். அதனால், அவர்களையே மாற்றிவிட்டது அரசு.


அதனால் புதிதாக வந்த ரிசர்வ் வங்கி கவர்னர், முன்பே எதிர்பார்த்தபடி 1.76 லட்சம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிலிருந்து அரசுக்கு மாற்றித் தர கையெழுத்து போட்டுவிட்டார். இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும், அவரது ஆதரவு கட்சிகளும், ஆதரவு பொருளாதார வல்லுனர்களும் ஜாக்பாட் அடித்திருப்பதாக சொல்கின்றன. அதனால், நாட்டில் பொருளாதார மந்தம் சீரடைந்துவிடும் என்கிறார்கள். 

அதே நேரம் இதை திருடப்பட்ட பணம் என்று ஓங்கி குரல் கொடுத்திருக்கிறார் ராகுல்காந்தி. ஏன் அப்படி சொல்கிறார் என்றால், ரிசர்வ் வங்கியில் உள்ள பணம் மக்களின் முதலீடாகும்!

சுதந்திர இந்தியாவை உருவாக்கிய நமது முன்னோர்கள் ’ஆர்பிஐ’ அரசுக்கு அப்பாற்பட்ட சுதந்திர தன்மையுள்ளதாக இயங்க வேண்டும் என நமக்கு அறிவுறுத்திச் சென்றனர்.

அதன்படியே தான் இது வரையிலான அரசுகளும் நடந்து வந்தன. எமர்ஜென்சியை கொண்டு வந்த இந்திராகாந்தியுமே கூட ரிசர்வ் வங்கி மீது கைவைக்க துணியவில்லை.

வாஜ்பாய், அத்வானியுமே கூட, தேசத்தையே ஒரு பொருளாதார பேரழிவில் தள்ளக் கூடிய இத்தகைய பழிபாவச் செயலை நினைத்துக் கூட பார்த்ததில்லை, ரிசர்வ் வங்கியை அரசியல் சர்ச்சைக்குள் கொண்டு வருவதே பெருந்தவறு! அந்த நிலையை தற்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டனர்.

ரிசர்வ் வங்கியின் அன்றைய துணை நிலை ஆளுநர் என்.எஸ்.விஸ்வநாதன், ’’கடன் வாங்கியவர்களைக் காப்பாற்றுவது வங்களின் வேலையல்ல! மாறாக பணத்தை வங்கியில் போட்டு வைத்திருப்பவர்களுக்குத்தான் கடன்பட்டுள்ளது’’ என்றார்.

அதே போல ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனராக இருந்து, போராடிப் பார்த்து ஆட்சியாளர்களின் அநீதிக்கு துணை போக முடியாது என்று ராஜினாமா செய்த விரல்ஆச்சார்யா, ‘‘மத்திய வங்கிகளின் சுதந்திரமான செயல்பாட்டை அரசு மதிக்க வேண்டும்.தேர்தல்கள் வந்து போகலாம்.

ஆனால்,அதை கருத்தில் கொண்டு குறுகிய கால ஆதாயத்திற்காக ஆட்சியாளர்கள் செயல்படுவதற்கு வங்கிகள் துணை போக முடியாது. வங்கி பணத்தை பொறுப்பில்லாமல் செலவழித்த அர்ஜெண்டினா சந்தித்த நெருக்கடிகள் என்னவென்பதை நினைவுபடுத்துகிறேன்’’ என்றார்.

ஆக, வங்கியில் பணம் பெற்று பொறுப்பின்றி அப் பணத்தை சூறையாடிய சிலருக்கு மேலும் கடன் கொடுத்து உதவவும், மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் ஓட்டு வங்கி அரசியலுக்காக ரிசர்வ் வங்கி பணத்தை அள்ளி இறைப்பதையும் ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று உறிதிபடத் தெரிவித்தவர்கள் எதிர்கட்சித் தலைவர்களல்ல! ரிசர்வ் வங்கி உயர்அதிகாரிகளே!

இதே காரணத்திற்காகத் தான் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் சிங் பட்டேல் ராஜுனாமா செய்தார். இவற்றை எல்லாம் மீறி இந்தியாவுக்கு சுபிட்சம் பிறக்கும் என்றே நாமும் மோடியைப் போலவும், நிர்மலா சீதாராமனை போலவும் நம்புவோம்.