ஆட்டோ மொபைலை தொடர்ந்து ஆட்டம் காணும் இந்திய வங்கித் துறை! நம் பணம் பத்திரமாக இருக்குமா? தமிழ்ச்செல்வன்!

பொதுத்துறை வங்கிகள் கோலோச்சும் இந்தியாவில் அண்மைக்காலமாக வங்கி முறை பற்றி மிகுந்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன. வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் பெரும் கடன் சுழலில் சிக்கிக் கொண்டுள்ளன.


வாராகடன் அளவு வானளாவ உயர்ந்து வங்கி முறையையே அலைக்கழிக்கிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. வங்கிமுறைக்கு ஆணி வேர் போல இருக்கும் ரிசர்வ் வங்கி வசமிருந்து 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு கையகப்படுத்திக் கொண்டபோது, எதிர்காலத்தில் நெருக்கடிகள் ஏற்படும்போது காப்பாற்ற உதவும் சேம நிதியை அரசு தனது சுயநலத்திற்காக தவறாகக் கையாள்வதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில்தான், மூடி'ஸ் என்று சொல்லப்படும் சர்வதேச ரேட்டிங் ஏஜென்சியானது, ஆசிய நாடுகளிலேயே, பொருளாதார அடிப்படையில் பார்க்கும்போது இந்திய வங்கிகள்தான் மிகவும் பலவீனமாகவையாக இருக்கின்றன என எச்சரிக்கை மணியை ஒலித்திருக்கிறது. கார்ப்பரேட்டுகள் வைத்திருக்கும் வாராக்கடன் அதிகரித்தால் வங்கிகளின் மூலதனமே வற்றிவிடும் அபாயம் இருப்பதாகவும் மூடிஸ் ரேட்டிங் ஏஜென்சி எச்சரித்துள்ளது.

இப்படிப்பட்ட பின்னணியில், யாரும் அச்சப்படத் தேவையில்லை, இந்திய வங்கி முறைக்கு எந்த ஆபத்தும் இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. திடீரென இப்படி ஒரு உத்தரவாதத்தை ரிசர்வ் வங்கி அளிக்க வேண்டிய அவசியம் என்ன? பங்குச்சந்தைகளில் வங்கிகளின் பங்குகள் சார்ந்த குறியீட்டெண் செவ்வாய்க்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. வங்கிகளில் நிறுவனங்கள் வாங்கியுள்ள கடன்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம் என வல்லுநர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்ல இந்தியாவில் உள்ள 5 பெரிய கூட்டுறவு வங்கிகளில் ஒன்றான, பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி பெரும் நெருக்கடியில் சிக்கியிருப்பதும் அம்பலமாகியுள்ளது. பணத்தையும், வங்கியில் வைத்திருந்த நகைகளையும் எடுப்பதற்கு வாடிக்கையாளர்கள் பெருமளவில் திரண்டதால் ஏகப்பட்ட குழப்பம் ஏற்பட்டது.

ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணத்தை எடுக்க முடியாது என வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியும் அளிக்கப்பட்டது. மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணாவிட்டால், விஷம் குடித்து சாவதைத் தவிர வேறு வழியில்லை என வாடிக்கையாளர் ஒருவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ட்விட் செய்தார். பதறிப்போன நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறி சமாளித்தார். 

இதன் பிறகுதான், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட வங்கிகள் தொடர்பாக வதந்தி பரவி வாடிக்கையாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்திய வங்கி முறை பாதுகாப்பாகவும் ஸ்திரத்தன்மையோடும் இருக்கிறது என உறுதி கூறுவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த விளக்கமே, உண்மை நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்பதுதான் இப்போது எழுந்துள்ள விமர்சனம். வங்கிகள் தனித்தனியே இயங்குகின்றன என்றாலும், வங்கி முறை என்பது பின்னிப் பிணைந்ததாகும்.

கார்ப்பரேட்டுகளுக்கு பெருந்தொகை கடனாகக் கொடுக்கும்போதெல்லாம் வங்கிகள் கூட்டாக இணைந்து கன்சார்ட்டியம் என்ற பெயரில்தான் கடன் கொடுக்கின்றன. ஏற்கெனவே மின்னுற்பத்தித் துறைக்கு வாரி வழங்கப்பட்ட கடன் வாராக்கடனாகி வங்கிகள் கையைப் பிசைந்து நிற்கின்றன என்பது ஒரு சோற்றுப் பதம்.

எனவே சங்கிலி இணைப்பின் ஏதோ ஒரு கண்ணியில் உடைப்பு ஏற்பட்டாலும் சீட்டுக் கட்டு மாளிகை போல வங்கி முறை சரிந்துவிடும். மத்திய அரசு ஏற்கெனவே இந்த உடைப்பை அடைப்பதற்குத்தான் வங்கிகளை இணைத்துக் கொண்டிருக்கிறது. இரண்டு மூன்று நோயாளிகள் இணைந்தால் ஆரோக்கியம் கிடைத்து விடுமா என்ற கேள்விக்கு இதுவரை பதிலில்லை. கார்ப்பரேட்டுகளுக்கும் சலுகைகளுக்கு குறைவில்லை.

இறுதியில் பாதிக்கப்படப் போவது வங்கியில் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருக்கும் அப்பாவிகள்தானா என்ற கேள்வியிலும் நியாயம் இருப்பதை மறுக்க முடியாது.