குடி போதையில் 5 பேர்! சிவப்பு நிற சொகுசு கார்! அசுர வேகம்! சாலையை கடந்த காவலாளிக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சென்னையில் உச்சகட்ட போதையில் காரில் வந்த 5 இளைஞர்கள் காவலாளி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள குடிநீர் வாரியத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் மன்னார்சாமி. இவர் இன்று அதிகாலை அருகிலுள்ள டீ கடைக்கு டீ குடிக்க சென்றிருக்கிறார். அப்போது அந்த பகுதியில் தாறுமாறான வேகத்தில் ஓட்டி வரப்பட்ட கார் ஒன்று மரத்தின் மீது மோதிய அதே நேரத்தில் மன்னார்சாமி மீதும் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட மன்னார்சாமி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.  

இந்நிலையில், அலறல் சத்தம் கேட்டு உடனடியாக காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் காரின் உள்ளே இருந்த ஐந்து இளைஞர்களையும் வெளியே வர கூச்சலிட்டனர். வெளியே வர மறுத்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம், காரில் இருந்த பொருட்களையும் எடுத்து பொதுமக்கள் மீது வீசி இருக்கின்றனர். பின்னர் ஐந்து இளைஞர்களையும் வெளியே வர சொல்லி அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு பிடித்து கொடுத்தனர்.   

ஐந்து இளைஞர்களும் உச்சகட்ட போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. போலீஸ் விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் பூனம் கிரண்ராஜா என தெரியவந்துள்ளது. இவர் அரும்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.