அமைச்சர் தொடர்பு? ஈசிஆர் சொகுசு பங்களா? உளவுத்துறை! தகில் ரமணி பதவி காவு கொடுக்கப்பட்டதன் பரபரப்பு பின்னணி!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர், தஹில் ரமணி. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி உயர்வுபெற்று வந்தவர்.


தலைமை நீதிபதி என்றாலும் வம்புதும்புகளில் இவரது பெயர் அடிபட்டதில்லை. முக்கியமான வழக்கு விசாரணைகளிலும் இவரது பெயரைக் கேட்டிருப்பது அரிது.

திடீரென கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மேகாலயா உயர்நீதிமன்றத்திற்கு தூக்கி அடிக்கப்பட்டார். இந்தியாவின் மிகப்பெரிய உயர்நீதிமன்றங்களில் ஒன்று சென்னை உயர்நீதிமன்றம் (நீதிபதிகளின் எண்ணிக்கை 75). இங்கு தலைமை நீதிபதியாக பதவி வகிப்பதே தனி கவுரவமாகக் கருதப்படுகிறது.

அப்படிப்பட்ட பொறுப்பில் இருந்து மிக்சசிறிய உயர்நீதிமன்றமான மேகாலயாவுக்கு (நீதிபதிகளின் எண்ணிக்கை 3) தஹில் ரமணி மாற்றப்பட்டது, வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியான விஷயமாகவே பார்க்கப்பட்டது. கொலீஜியத்தின் இந்த முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தஹில் ரமணியின் மாநிலமான மகாராஷ்டிரத்திலும் வழக்கறிஞர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தபோது, 2017ஆம் மே மாதத்தில் நாடே எதிர்பார்த்த முக்கிய வழக்கு ஒன்றில் நேர்மை தவறாத தீர்ப்பு வழங்கியவர் தஹில் ரமணி. 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரங்களின்போது பில்கீஸ் பானு என்ற பெண்ணை கூட்டாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய 11 பேரின் ஆயுள் தண்டனையை உறுதிப்படுத்திய வழக்கு அது.

இதற்காகவே, தஹில் ரமணி பழிவாங்கப்படுகிறார் என்ற விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்தன. இதன் விளைவாக, கொலீஜியம் வரலாற்றிலேயே முதல் முறையாக, பணியிட மாறுதலுக்கான விளக்கம் தரப்பட்டது. இதற்கான காரணத்தை கூறுவது நீதித்துறைக்கு நல்லதல்ல என்றாலும், அவசியம் ஏற்பட்டால் அதையும் செய்ய தயங்கப்போவதில்லை என கொலீஜியம் எச்சரித்தது.

அதேசமயம், தன்னை பணியிட மாறுதல் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு, உச்சநீதிமன்ற கொலீஜியத்தை தஹில் ரமணி கேட்டுக்கொண்டார். எதிர்பார்த்தது போலவே தஹில் ரமணியின் கோரிக்கையை கொலீஜியம் நிராகரிக்கவே, கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவையும் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். அத்தோடு விஷயம் முடிந்துவிடவில்லை.

குறைவான நேரமே பணியாற்றுவது, சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த அமர்வை கலைத்தது, ஆளுங்கட்சி சேர்ந்த மூத்த அரசியல்வாதியுடன் நெருக்கம் பாராட்டியது, சென்னையில் 2 வீடுகள் வாங்கிய விவகாரம் ஆகியவையே காரணம் என்று, ஊடகங்கள் எழுதின. மெட்ராஸ் பார் அசோசியேசன் ஏற்பாடு செய்த பிரிவு உபசார விழாவில் பேசிய தஹில் ரமணி, ஓராண்டில் 5 ஆயிரத்து 40 வழக்குகளை பைசல் செய்திருப்பதாக குறிப்பிட்டார்.

சென்னை தமக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும், இங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே வீடு வாங்கியதாகவும் தஹில் ரமணி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், நீதிபதிக்குரிய நடத்தை விதிகளை தஹில் ரமணி மீறிவிட்டதாக உளவுத்துறை (ஐபி) அறிக்கை கொடுத்திருந்ததாகவும், அதன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் சிபிஐ-க்கு அனுமதி வழங்கியிருப்பதாகவும் வெளியாகியிருப்பதுதான் புதிய தகவல்.

சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த சிறப்பு அமர்வை, தமிழக அமைச்சர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் கலைத்ததாகவும், இதற்காக அவர் பண ஆதாயம் அடைந்திருக்கிறார் என்பது போல ஐபி அறிக்கை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

செய்தி: தமிழ்ச்செல்வன்