கொரோனா அட்டாக் எதிரொலி ரியல் எஸ்டேட் கிடுகிடு வீழ்ச்சி

கொரோனா, உலகில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் அச்சத்துடன் உச்சரிக்கும் வார்த்தை இது.


சாதி மதம் பணம் பக்தி என எந்தவித பாகுபாடும் இன்றி சீனாவில் பரவத்தொடங்கிய இந்த வைரஸ் இன்று ஒட்டுமொத்த மனித இனத்தையும் கண்மூடித்தனமாக அழித்து வரும் இந்த வேளையில் உலகில் உள்ள வல்லரசு நாடுகள் எல்லாம் சொல்லொணா துயரில் துவண்டு வருகின்றன. 

கடந்த 2019ம் ஆண்டு திசம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய இந்த வைரஸ் இன்று உலகத்தின் அனைத்து பகுதிகளையும் விட்டு வைக்காமல் எல்லாவற்றையும் சூறையாடி வருகிறது.

மனித நாகரீகம் தழைத்து வளர்ந்த இந்த காலத்தில். மருத்துவ வளர்ச்சியில் நாம் பின்தங்கியவர்கள் என்கிற உண்மையை ஆணித்தரமாக நமக்கு கூறி வருகிறது கொரோனா வைரஸ். 

மனித நாகரீகம் உடலுழைப்பாக பரிணாமம் பெற்று இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான தொழிற்சாலைகளைகளையும் எண்ணிலடங்கா தொழிலாளிகளையும் உருவாக்கி உள்ளது. அப்படி உருவாக்கப்பட்ட தொழில் துறை அனைத்தும் இன்று கடும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன்படி

இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் ரியல் எஸ்டேட் துறையின் நிலை மிகவும் பரிதாபத்தில் சிக்கியுள்ளதாக எச்டிஎஃப்சி வீட்டு கடன் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீபக் பரேக் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில மாதங்களாக விற்கப்படாத குடியிருப்புகளின் சொத்து மதிப்பு தற்போது 20 சதவீதம் வரை வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மார்ச் முதல் தற்போது வரையிலான காலத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 

இந்தியாவில் உள்ள முன்னணி முதல் எட்டு மெட்ரோ நகரங்களில் மட்டுமே சுமார் 15 லட்சம் வீடுகளும், அதில் மும்பை பெருநகர மண்டலத்தில் மட்டுமே சுமார் 8.90 லட்சம் வீடுகளின் கட்டிடப் பணி முற்றிலும் தேங்கியுள்ளது. அதற்கு அடுத்ததாக டெல்லி என்.சி.ஆரில் 4.25 லட்சம் வீடுகளின் கட்டிடப் பணியும் முடக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் தற்போது கட்டி முடிக்கப்பட்டு தயாரான நிலையில் இருந்தும் விற்பனை ஆகாமல் உள்ள வீடுகளில் மதிப்பு மட்டும் 66 ஆயிரம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கட்டிட அனுமதி தாமதங்கள், ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் குறைந்த அளவு விற்பனை போன்ற காரணங்களோடு தற்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

ஊரடங்கு தடைக் காலம் முடிந்தாலும் ரியல் எஸ்டேட் துறையில் இயல்பு நிலை திரும்புமா என்பது சந்தேகமே. ஏனெனில் கடந்த ஜனவரி முதல் மார்ச் காலாண்டில் மொத்தம் 55,138 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2019 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை விட 19 சதவீதம் குறைவாகும். மார்ச் மாதத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முழுக் காலாண்டிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. 

மேலும் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி, நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளின் விலை 10 முதல் 15 சதவீதம் வரையில் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை கடந்த ஐந்து ஆண்டுகளாகவே கடுமையான மந்த நிலையில் இயங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி மற்றும் புதிய ரியல் எஸ்டேட் சட்டம் கடுமையாக்கப்பட்டது போன்ற காரணிகளால் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் தற்போது கொரோனா பீதியால் ஊரடங்கு அமலானது மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 மக்கள் ஒரு பக்கம் தினசரி வாழ்க்கையை நடந்தவே கஷ்டப்படும் இந்த சூழலில், கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவித்து வரும் பணி நீக்கங்கள் காரணமாக இந்தியாவில் ஏற்பட்டு வரும் புதிய வேலைவாய்ப்புகள் மிகப்பெரிய கேள்விக் குறியை ஏற்படுத்தி உள்ளதால் மக்கள் வீடு வாங்கும் ஆர்வம் இன்றி தங்களது வேலையை தக்கவைத்துக் கொள்ள படாத பாடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வருகின்ற மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த விற்பனை மற்றும் சரிவு விகிதம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசு மற்றும் நிதியமைச்சகம் இணைந்து ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை உடனடியாக செய்யவேண்டும் என்று அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். 

ஏற்கனவே திவால் நிலைக்கு தள்ளப்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்ட மூலதன நிதியைப் போல கடும் நஷ்டத்தில் இயங்கும் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும் மூலதன உதவி செய்து நொடித்துப் போயுள்ள ரியல் எஸ்டேட் துறையை சீரமைக்க அரசு முன்வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

மணியன் கலியமூர்த்தி