உண்மையான பாசம்! நிஜமான காதல்! நடிப்பு ராட்சசன் பகத் பாசிலின் கும்பிளாங்கி நைட்ஸ் விமர்சனம்!

வீடும், காரும் வாங்காம எப்படி காதலிக்க முடியும் என்று கணக்குப் போட்டு வாழும் இன்றைய மனிதர்களுக்கு, உண்மையான பாசமும் காதலும் பணத்தில் இல்லை என்று சொல்லித்தரும் கவிதைதான், கும்பிளாங்கி நைட்ஸ் என்ற மலையாளத் திரைப்படம்.


நான்கு சகோதரர்களின் கதை என்றதும், ஆனந்தம் பட ஸ்டைலில் லலல்லா லலல்லா என்று பாடிக்கொண்டிராமல், நிஜமான அடிதடியுடன் அன்றைய பொழுது ஆரம்பமாகிறது. மூன்று அண்ணன்மார்களும் வெட்டியாக ஊர் சுற்றி, மீன் பிடித்துக் கொண்டுவருவதை வைத்து சமையல் செய்து போடுகிறான் பள்ளியில் படிக்கும் கடைசி தம்பி.

திருமணம், வேலை என்பதற்கும் தங்கள் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்ற அளவுக்கு ஏழ்மையை ஏற்றுக்கொண்டு வெட்டியாக மூன்று அண்ணன்களும் திரிகிறார்கள். அவர்கள் வாழும் இடமான கும்பிளாங்கி என்பது கேரளாவின் மிகச்சிறந்த சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால், வெளிநாட்டினர் வந்து குவிகின்றனர். வேலை வெட்டியில்லாத பாபியை சின்ன வயதில் காதலித்த பேபி மீண்டும் சந்திக்கிறாள். சட்டென்று காதல் மழை பொழிகிறது. வேலை வெட்டியில்லாதவன் என்றாலும் பாபியின் மீது அன்பைப் பொழிகிறாள். அவனும் பேபிக்காக தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயற்சி செய்கிறான்.

பேபியை பெண் கேட்டுச் செல்ல வேண்டும் என்று அண்ணனிடம் பாபி பேசும் இடம் கவிதை. அதுவரை அடிதடி என்று மோதிக்கொண்டு இருந்த அண்ணன், சட்டென பொறுப்பு வந்து பெண்ணுக்கு பாதுகாவலராக இருக்கும் பகத் பாசிலை சந்திக்கிறார். ஏதாவது ஒரு வேலை செய்யட்டும், பிறகு பார்க்கலாம் என்று சொல்லி அனுப்புகிறார் பகத். அந்த பதிலில் உள்ள உண்மை சகோதரர்களுக்குப் புரியவர, கடுமையான வேலை ஒன்றில் சேர்கிறான் பாபி. அதனை சமாளிக்கமுடியாமல் தடுமாறி, காதலே வேண்டாம் என்று விலகுகிறான். ஆனால், எல்லாவற்றையும்விட காதல் உயர்ந்தது என்று புரியவர, மீண்டும் சேர்கிறார்கள்.

எப்படியாவது திருமணம் முடித்துக்கொள்ளலாம் என்று இருவரும் ஊரைவிட்டு ஓடிவிட திட்டம் போடுகிறார்கள். அந்தத் தகவல் பகத் பாசிலுக்குத் தெரியவர, அதுவரை கவிதை மாதிரி சென்றுகொண்டிருந்த திரைப்படம், திடீரென புயல் வேகத்திற்கு மாறுகிறது.

கதாநாயகியின் அக்கா கணவர் என்ற சாதாரண கதாபாத்திரத்தை பகத் ஏன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு கடைசி 15 நிமிடங்களில் நியாயம் கற்பிக்கிறார். என்னதான் சண்டை போட்டுக்கொண்டிருந்தாலும், சகோதரனுக்கு ஒரு பிரச்னை என்றதும் மற்ற மூவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் பாசம்.

காதலும் காற்றும் சரியான நேரத்தில் வந்து சேரும் என்பதுபோல், ஒவ்வொரு அண்ணனுக்கும் ஒரு உறவு வந்து சேர்கிறது. அத்தனை பேரும் ஏழைகள், ஆனால் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் அப்படியே ஏற்று வாழ்கிறார்கள்.

ஒரே படத்துக்குள் பத்து படத்துக்கான கதை இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். தடித்தடியான நான்கு மகன்களையும் தனியே வாழவிட்டு, ஒரு மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறாள் அவர்களின் அம்மா. நான்கு பேரும் சில நாட்கள் மட்டுமாவது எங்களுடன் வந்து வசிக்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் வைக்க, கொஞ்சமும் யோசனையே இல்லாமல் மறுதலித்துச்செல்கிறாள் அந்தத் தாய். அவள் உடம்புக்கு அத்தனை பிரச்னை இருக்கு என்று மற்ற சகோதர்களை தேற்றுகிறான் மூத்தவன்.

காதலுக்காக ஊரைவிட்டு ஓடிவந்த ஜோடிக்கு உதவியாக இருக்கிறான் மூத்தவன். ஆனால்,ஒரு அசந்தர்ப்பத்தில் அந்தப் பெண் நிறைமாதமாக இருக்கும்போது மூத்தவன் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு காதலன் மரணத்தைத் தழுவுகிறான். அந்தப் பெண்ணை தன்னுடன் வீட்டுக்கு அழைத்துவருகிறான் மூத்தவன். நான் வந்து சேரும் இடம் எல்லாமே மண்ணாப் போயிடும், அதனால நான் போறேன் என்று அந்தப் பெண் சொல்கிறாள். ‘இந்த இடம் ஏற்கெனவே மண்ணாத்தான் இருக்கு, நிம்மதியா தங்கச்சியா எங்ககூடவே இரு” என்கிறான் பாபி. ஒரே ஒரு டயலாக்கில் படத்தின் கனம் ஒட்டுமொத்தமாக கூடுகிறது.

இயக்குநர் மது சி.நாராயணனுக்கு இது முதல் படம் என்பதை நம்பவே முடியவில்லை. கும்பளாங்கியில் ஒன்றரை ஆண்டுகள் தங்கியிருந்து ரசித்து  படம் எடுத்தாராம். இந்த உலகில் 90 சதவிகிதத்திற்கும் கீழான மக்கள் இல்லாமையிலும் எப்படி ஆனந்தத்துடன் வாழ்கிறார்கள் என்பதை திரையில் பார்க்க ஒரு நல்ல சந்தர்ப்பம், நழுவ விடாதீர்கள்.