சமஸ்கிருதத்துக்கும் அ.தி.மு.க. ஆதரவு..! சூப்பராக ஜால்ரா ரவீந்திரநாத்குமார். சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியதா தமிழ்?

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது.


மத்திய அரசு என்ன கொண்டுவந்தாலும், அதனை அப்படியே ஆதரிப்பது என்ற நிலையில் இருக்கும் அ.தி.மு.க. மக்களவையிலும் இதற்கு ஆதரவு தெரிவித்தது. இந்த மசோதாவுக்கு முழு ஆதரவு தெரிவித்து ரவீந்திரநாத்குமார் பேசினார்.

அதேநேரம் இந்த மசோதாவுக்கு தி.மு.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதா மீது பேசினார் தி.மு.க. எம்.பியான ஆ.ராசா. திமுக எந்தவொரு மொழிக்கும் எதிரானது அல்ல என்று கூறிய ஆ.ராசா, எந்தவொரு மொழி மீதும் மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துமானால் அதனை திமுக ஏற்றுக் கொள்ளாது என்றார்.

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் வந்தது என்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சமஸ்கிருதத்திற்கான வயது 2,500 ஆண்டுகள் என்று கூறிய ஆ.ராசா, தமிழ் மொழி 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் கூறினார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசியபோது, ‘‘சமஸ்கிருதம், மொழிகளுக்கு எல்லாம் தாய் என்று கூறுவதை ஏற்க முடியாது. அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை. சமஸ்கிருதம் சடங்கியல் மொழியே தவிர, புழங்கு மொழி அல்ல’’ என்றார். 

அடுத்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ‘‘மொழி, இனம், மதம் சார்ந்து அரசு இயங்கக் கூடாது. வரி வடிவம் இல்லாத மொழிதான் சமஸ்கிருதம். சமஸ்கிருதத்திற்காக 3 பல்கலைக்கழகங்களை உருவாக்கிய மத்திய அரசு, செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அமைக்க வேண்டும்’’ என்றும் வலியுறுத்தினார். 

இப்படியெல்லாம் சொன்னாலும் கேப்பாங்களா..? சமஸ்கிருதம்தான் கடவுளின் மொழியாமே. சமஸ்கிருதம் பேசினால் நோய்கள் கட்டுப்படுகிறதாம். அப்படியென்றால், மருத்துவமனைகளை மூடிவிட்டு பல்கலைக்கழகம் திறக்கலாமே?