ஆபிஸ்க்கு வந்தால் ரூ.500! கடைக்கு வரனும்னா ரூ.500! ஊட்டியை கலக்கும் பெண் தாசில்தார் சாந்தினி

நீலகிரி மாவட்டம் உதகையில் ரேஷன் கடை ஊழியர்களிடம் லஞ்சம் பெறுவதாக பெண் அரசு ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


உதகை வட்டார வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மேற்கொண்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் 30,845 ரூபாய் கைப்பற்றப்பட்டது. 

மக்கள் ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்கும் விவரங்கள் ஸ்மார்ட் கார்டு இயந்திரத்தில் பதிவாகும். பின்னர் அந்த ஸ்மார்ட் கார்டு இயந்திரங்களை மாதந்தோறும் வட்டார வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பித்து மொத்த விற்பனை பட்டியல் சமர்ப்பிக்கப்படும். இப்படி சோதனைக்கு வந்த ரேஷன் கடை ஊழியர்களிடம் உதகை வட்டார வழங்கல் அலுவலர் சாந்தினி ரூ.500 லஞ்சமாகப் பெற்றதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஓராண்டாகவே ஒவ்வொரு மாதமும் சாந்தினி லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இதுகுறித்து தகவல் அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதகை வட்டார வழங்கல் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டபோது கணக்கில் வராத ரூ.30,845 கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, சிறப்பு தாசில்தார் சாந்தினி மற்றும் லஞ்சம் வாங்க உதவியாக இருந்த தியாகு மற்றும் பாலாஜி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேலும் உதகை வட்டத்தில் உள்ள 114 ரேஷன் கடை ஊழியர்களிடம் சாந்தினி மாதந்தோறும் ரூ.500 லஞ்சம் பெறுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இது குறித்து ரேஷன் கடை ஊழியர் தெரிவித்தபோது ``கடந்த பல மாதங்களாக இப்படி நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் மாதப் பட்டியல் வழங்கும்போது ஒரு கடைக்கு ரூ.500 கட்டாயம் வழங்க வேண்டும் அதே போல் ரேஷன் கடைக்கு ஆய்வு செய்ய வரும்போதும் ரூ.500 வழங்க வேண்டும். மொத்தம் மாதம் ரூ.1,000 வழங்க வற்புறுத்துகின்றனர்" என்றார்.