ராட்சசன், 96, பரியேறும் பெருமாள் படங்களுக்கு விருது பெறும் தகுதி இல்லையா? பொங்குகிறார் இயக்குனர் வசந்தபாலன்!

மசாலா இந்தி படங்களுக்கு எல்லாம் விருதுகள் குவிந்திருக்கும்போது, உருப்படியான தமிழ் படங்களுக்கு ஏன் விருதுகள் வழங்கப்படவில்லை என்று தேசிய விருதுகளுக்கு எதிராக பொங்கி எழும் இயக்குனர்கள் எண்ணிக்கை பெருகி வருகிறது.


இன்று இயக்குனர் வசந்தபாலன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும்,தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இந்த வருடம் தேசிய விருதுக்கு பேரன்பு, பரியேறும் பெருமாள், வடசென்னை, ராட்சசன், 96 உள்ளிட்ட நிறைய நல்ல, திறமையான, தகுதியான திரைப்படங்கள் சென்றிருந்தும் ஏன் புறக்கணிக்கப்பட்டது தமிழ் சினிமா?

பேரன்பு திரைப்படத்தில் மம்முட்டி, சாதனா தன் உயிரை கொடுத்து அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருந்தார். யுவனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு என்ன குறை கண்டீர்கள்? கேள்விப்பட்ட போது தான் தெரிந்தது, தமிழில் இருந்து நல்ல நடுவர்களும் தேர்வு குழுவுக்கு அழைக்கப்படவில்லை. 

கண்துடைப்பாகத்தான் நடுவர்கள் அழைக்கப்படுகின்றனரா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேசிய விருது கமிட்டி நடுவராக ஒரு தினத்திற்கு முன்பு என்னை அழைத்தார்கள். முப்பது நாட்கள் டெல்லி பணிக்கு ஒரு நாள் முன்பு தகவல் தெரிவிப்பது சரியா? இது கண்துடைப்பின்றி வேறென்ன? 

இந்த நிலை மாறவேண்டும். தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழகத்தின் அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். 

யாராச்சும் பதில் சொல்லுங்கப்பா!