சிறுக சிறுக சேர்த்தது..! எல்லாம் ரூ.500, ரூ.2000 நோட்டு! ஒற்றை எலியால் விவசாயி பணத்துக்கு நேர்ந்த பரிதாபம்!

கோவை மாவட்டத்தில் விவசாயம் செய்து சிறுக சிறுக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை எலி கடித்து தின்றுவிட்டு சென்றதால் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.


வெள்ளியங்காடு கிராமத்தை சேர்ந்த ரங்கராஜ் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற அறுவடை மூலம் விவசாயி ரங்கராஜூக்கு ரூ.50,000 பணம் கிடைத்துள்ளது. அந்த பணத்தை உடனடியாக வங்கியில் டெபாசிட் செய்யாமல் தனது வீடு ஒன்றே பாதுகாப்பு என கருதி ஒரு பையில் அந்த பணத்தை போட்டு பாதுகாப்பற்ற முறையில் வீட்டில் வைத்துள்ளார். 

சில நாட்கள் கழித்து செலவழிப்பதற்காக அந்த பணப் பையை எடுத்தபோது ரங்கராஜூக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பையில் இருந்து பணம் அனைத்தும் தூள் தூளாக கிழிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த விவசாயி வேதனை அடைந்தார். எப்படி பணம் கிழிந்தது என பார்க்கும்போது வீட்டில் சுற்றித் திரியும் எலிதான் அந்த குறும்பு வேலையை செய்திருப்பதை கண்டறிந்தார்.

பின்னர் கிழிந்த நோட்டுக்களுடன் வங்கிக்கு சென்ற விவசாயி பணத்தை மாற்றித் தருமாறு கேட்க, ரூபாய் நோட்டுகள் தாறுமாறாக கிழிந்து இருப்பதால் மாற்றித் தரமுடியாது என கைவிரித்து விட்டனர். இதனால் சோகம் அடைந்த விவசாயி மனவேதனையுடன் வீடு திரும்பினார். இனிமேலும் இந்த தவறு நடக்ககூடாது என்றால் ஒரு பூனையை வாங்கி வளர்க்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார் விவசாயி ரங்கராஜ்.

இதேபோல் ஒரு சம்பவம் வடமாநிலத்தில் நடைபெற்றது. நிலம் விற்ற பணம் 25 லட்சம் ரூபாயை ஒரு குடும்பம் வீட்டில் வைத்துவிட்டு வெளியில் செல்ல அதை அவர்கள் வளர்த்த ஆடு கடித்து தின்றுவிட்டது. பின்னர் அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பம் ஆத்திரத்தில் அந்த ஆட்டை அடித்து சாப்பிட்டு விட்டனர். வேறு என்ன செய்யமுடியும்? போலீசுக்கா செல்லமுடியும்?