கருத்ததுனா விலை கம்மி! சிவத்ததுனா ரேட் ஜாஸ்தி! பச்சிளம் குழந்தைகளை பேரம் பேசி விற்ற நர்ஸ்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை நிறம், தரம், எடை வாரியாக விற்பனை செய்யும் கும்பலுக்கு 30 ஆண்டுகளாக இடைத் தரகராக செயல்பட்ட முன்னாள் செவிலியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


சட்டபூர்வமாக தத்தெடுப்பதில் சிக்கல்கள் இருப்பதால் குறுக்கு வழியில் தத்தெடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் ஏழைக் குடும்பல் குழந்தைகள், தவறான உறவில் பிறந்த குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகளை வாங்கி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்யும் கும்பலில் வியாபாரம் அமோகமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் ஒருவர் குழந்தை இல்லாதவரிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 30 ஆண்டுகளாக இடைத்தரகராக இருப்பதாகவும், குழந்தை விற்பனைக்காகவே அரசு மருத்துவமனை செவிலியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றதாகவும் அவர்கூறுவது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது. 

முன் பணமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் குழந்தையை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும், அழகான தோற்றம், நிறம் மற்றும் 3 கிலோ எடையுடனும் உள்ள ஆண் குழந்தை 4 லட்சம் ரூபாய் வரை விலை என்றும், பெண் குழந்தையாக இருந்தால் அதிகபட்சம் 3 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் அந்த செவிலியர் கூறுவதும் பதிவாகியுள்ளது. 70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் வாங்கிக் கொடுக்கத் தயாரக இருப்பதாகவும் அந்த ஆடியோவில் அவர் கூறுகிறார். 

தொடர்புடைய செவிலியரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார், செவிலியரையும், அவரது கணவரையும் கைது செய்துள்ளனர். குழந்தைக் கடத்தல் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலார் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.