ரேப் இன் இந்தியா, ராகுல் மீது போர் தொடுத்து விஷயத்தை திசை திருப்பிய மோடி!

ஒவ்வொரு எதிர்க் கட்சியினரும் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை நார் நாராக கிழித்து தொங்க விட்டனர். அதற்கு ஏற்ப இந்திய நாடெங்கும் பல்வேறு மாநிலங்களில் விஷயம் தீப்பிடித்து எரிகிறது.


இந்த விஷயத்தை எதிர்கொள்ள முடியாமல்தான் தடுமாறியது மோடி அரசு. என்னதான் மெஜாரிட்டி வைத்து சட்டமாக்கி விட்டாலும், எதிர்த்துப் பேசுபவர்களின் மூக்கை உடைக்க முடியாமல் தள்ளாடி வந்தது.

அந்த நேரத்தில்தான் உளவுத்துறை ஐடியாவை அள்ளிக் கொடுத்ததாம். ஆம், ரேப் இன் இந்தியா என்று ராகுல் பேசி வருகிறார். இது இந்தியாவை கொச்சைப்படுத்துகிறது என்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் உரக்கக் குரல் கொடுங்கள் என்று சொல்லப்பட்டதாம்.

அதனால் பா.ஜ.க.வின் பெண் எம்.பி.க்கள் இரண்டு அவையையும் கலங்கடித்து ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். அவையில் இல்லாத ராகுல் எப்படி மன்னிப்பு கேட்பார் என்று சபாநாயகர் கேட்டதற்கும் பதில் இல்லை.

ஆனால், செய்ய வேண்டியதை சிறப்பாக பா.ஜ.க. செய்து முடித்துவிட்டது. ஆம், ஆளும் கட்சியினர் மெகா போராட்டத்துடன் அவையை நடத்தமுடியாமல் முடித்துவைக்கப்பட்டது.

அப்பாடா, தப்பித்தோம் என்று ஆளாளுக்கு ஓடிவிட்டார்கள். இனிமேல் வெங்காயம் விலை பற்றியும், குடியுருமை சட்டம் பட்டியும் அவர்களுக்கு என்ன கவலை..?