பாண்டேவுக்கு காத்திருக்கும் இளைஞர் அணி தலைவர் பதவி! எந்த கட்சியில் தெரியுமா?

தந்தி டிவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ரங்கராஜ் பாண்டே அரசியல் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


   6 ஆண்டுகளாக தந்தி டிவியில் அசைக்க முடியாத நபராக விளங்கிய பாண்டே நேற்றுடன் அந்த தொலைக்காட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஒரு மாதம் நோட்டீஸ் பீரியட் கூட கொடுக்காமல் பாண்டே தந்தி டிவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு முழு முதல் காரணம் டிடிவி தினகரனுக்கு சாதகமான செய்திகளை வெளியிட்டதாகும். ஏற்கனவே ஒரு முறை இந்த பிரச்சனை வந்த போது பாண்டே வேலையில் இருந்து விரட்டப்பட்டார்.   ஆனால் அப்போது அவருக்கு பா.ஜ.க மேல் மட்ட தலைவர்களுடன் இருந்த தொடர்புகள் மூலம் தந்தி டிவி நிர்வாகத்துடன் சமரசம் பேசி பணியில் மீண்டும் இணைந்தார். ஆனால் அதன் பிறகு பாண்டேவுக்கு சில அதிகாரங்கள் கட் செய்யப்பட்டன. தந்தி டிவி சார்பில் வெளியில் யாரையும் சந்திக்கும் வாய்ப்பு பாண்டேவிடம் இருந்து பறிக்கப்பட்டது. மோடி சென்னை வந்த போது, செய்தி ஆசிரியர்கள் டெல்லி சென்று மோடியை சந்தித்த போது பாண்டே அங்கு இல்லை.

   இதே போல் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு சென்னை வந்து செய்தி ஆசிரியர்களுக்குட்ரீட் கொடுத்த போதும் பாண்டேவை அங்கு பார்க்க முடியவில்லை. நிர்மலா சீதாராமன் பத்திரிகை ஜாம்பவான்கள் வீடுகளுக்கு நேரில் சென்ற போதும் பாண்டே வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இது போன்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் தந்தி டிவி சார்பில் அதன் உரிமையாளர் பாலசுப்ரமணிய ஆதித்தனே கலந்து கொண்டார்.

   இந்த நிலையில் தந்தி டிவியில் இருந்து பாண்டே நீக்கப்பட்டுள்ளார். அவர் காவேரி தெலைக்காட்சியில் இணைய உள்ளதாகவும், காவேரி தொலைக்காட்சி விரைவில் ஏசியா நெட் தொலைக்காட்சி ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது பா.ஜ.க எம்.பி ராஜீவ் சந்திரசேகருக்கு சொந்தமானது ஏசியா நெட் குழுமம். இந்த குழுமத்தில் இருந்து உருவான ரிபப்ளிக் தொலைக்காட்சியில் அர்னப் கோஷ்வாமி உள்ளார்.

   இதே பாணியில் தமிழகத்தில் தொடங்கப்பட உள்ள ஏசியாநெட் தொலைக்காட்சிக்கு பாண்டே செய்தி ஆசிரியர் ஆவார் என்று கூறப்படுகிறது. அதாவது காவேரி தொலைக்காட்சியை ஏசியா நெட் விலை பேசுவதே பாண்டேவுக்காக தான் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் எதிர்பார்த்த பணி கிடைக்கவில்லை என்றால் பாண்டே பா.ஜ.கவில் இணைவார் என்று தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.   பா.ஜ.கவின் தமிழக இளைஞர் அணி தலைவர் பதவியில் பாண்டேவை அமர வைக்க அக்கட்சியின் மேலிடம் கூட தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு பாண்டேஅளிக்கும் பதிலை பொறுத்தே இந்த விஷயத்தில் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படுமாம்.