தந்தி டிவியில் இருந்து ரங்கராஜ் பாண்டே திடீர் ராஜினாமா! காரணம் இது தான்!

தந்தி டிவியின் செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே திடீரென அந்த தொலைக்காட்சியில் இருந்து பதவி விலகியுள்ளார்.


கடந்த 2012ம் ஆண்டு முதல் தந்தி டிவியில் பணியாற்றி வந்தவர் ரங்கராஜ் பாண்டே. தின மலர் நாளிதழ் குழுமத்தில் இருந்து தந்தி டிவியின் செய்தி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வந்தவர் இவர். அதன் பிறகு தந்தி டிவி நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து ரங்கராஜ் பாண்டே அந்த தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் ஆனார். தந்தி டிவியில் ஒளிபரப்பாகும் ஆயுத எழுத்து நிகழ்ச்சி மூலம் புகழின் வெளிச்சத்திற்கு பாண்டே வந்தார்.

   தமிழ் தொலைக்காட்சிகளில் அது நாள் வரை இருந்த விவாத நிகழ்ச்சிகளுக்கு புதிய அங்கீகாரம் பெற்றுத் தந்தவர் பாண்டே என்று கூறலாம். மற்ற தொலைக்காட்சிகளிலும் விவாத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும் கூட தந்தியில் பாண்டே தொகுதி வழங்கும் விவாத நிகழ்ச்சிகளுக்கு என்று தனி மவுசு உருவானது. இதன் மூலம் தந்தி தொலைக்காட்சிக்கும் செய்தி பிரியர்கள் மத்தியில் நல்ல மரியாதை கிடைத்து வந்தது.

  இதே போல் ரங்கராஜ் பாண்டே பிரபலங்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பும் நிகழ்ச்சியும் தந்தி தொலைக்காட்சியின் பிராண்ட் ஆனது. மேலும் ரங்கராஜ் பாண்டே பட்டிமன்றம் நடத்தி செய்தி தொலைக்காட்சி வரலாற்றில் புதிய ஒரு விஷயத்தை புகுத்தினார். இதனை பின்பற்றி தற்போது அனைத்து செய்தி தொலைக்காட்சிகளுமே பட்டிமன்றம் நடத்த ஆரம்பித்துவிட்டன. மோடி முதல் தற்போது அரசியலுக்கு வந்த கமல் வரை பாண்டே எடுத்த பேட்டிகள் தனி முத்திரை பதிப்பதாகவே இருந்தன.   இந்த நிலையில் தந்தி தொலைக்காட்சியில் இருந்து பாண்டே ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சொந்த விருப்பத்தின் பெயரில் தான் ராஜினாமா செய்துள்ளதாக பாண்டே கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ராஜினாமா தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் தந்தியில் பணியாற்றும் பலரும் பாண்டே வெளியேறிவிட்டதாக தகவல்களை கூறுகின்றனர்.