தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நேற்று காலை மழைக்காக, மேகங்கள் கடல் நீரை உறிஞ்சும் காட்சியை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் மொபைலில் படம் பிடித்தனர்.
கடல் நீரை உறிஞ்சிய மேகங்கள்! ராமேஸ்வரம் தனுஷ்கோடி அதிசயம்! நேரில் பார்த்தவர்கள் பரவசம்!
மழைப்பொழிவிற்காக கடல் மற்றும் ஏரியில் இருந்து நீரை மேகங்கள் உறிஞ்சி எடுப்பதும், மேகங்களில் சேகரிக்கப்படும் நீர் பின்னர் மழையாக பொழிவதும் இயற்கை. ஆனால் இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பது மிகவும் அபூர்வம். ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி, பாம்பன் கடல் பகுதியில் மேகங்களால் நீர் உறிஞ்சப்படும் நிகழ்ச்சி அவ்வப்போது நடைபெறுகிறது.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் நேற்று நடைபெற்ற இதுபோன்றதொரு காட்சியை சுற்றுலாப்பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர். நேற்று காலை 9 மணியளவில் அரிச்சல்முனை பகுதியில், பாக் ஜலசந்தி கடலில் மேகங்கள் கடல்நீரை மழைப்பொழிவிற்காக உறிஞ்சியது.
நிலத்திலிருந்து கடல்நீர் மேகத்தை நோக்கி சுழன்றபடி அந்தரத்தில் பாய்ந்து சென்றதை பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். சுற்றுலாப்பயணிகள் தங்களது மொபைல் போன்களில் இந்த அரிய காட்சியை படம் பிடித்தனர்.
மேகங்களால் கடல் நீர் உறிஞ்சப்படும்போது அந்த இடத்தில் அதிகளவில் மீன்கள் இருந்தால், மீன்களும் கடல் நீருடன் உறிஞ்சப்பட்டு மழை பெய்யும்போது, மீன் மழையாகவும், கடல் சிப்பிகளும் சேர்ந்து மழையாக பூமியில் பெய்வதும் அவ்வப்போது அரிதாக நடப்பது குறிப்பிடத்தக்கது.