அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யாத ராமதாஸ்! கடுகடு எடப்பாடி பழனிசாமி!

முதல் ஆளாக அ.தி.மு.க. கூட்டணியில் நுழைந்து தனக்கான சீட்டை பெற்றுக்கொண்டவர் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ்.


அதேபோன்று கட்சியில் பல்வேறு கோரிக்கை வைத்து, அத்தனையும் நிறைவேற்றிக் கொண்டார். ஆனால், அவர் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டது தவிர, வேறு எந்த பிரசாரமும் செய்யவில்லை என்பது அ.தி.மு.க.வினரிடம் பெரும் எரிச்சலைக் கிளப்பியுள்ளது. அதேபோன்று அ.தி.மு.க.வினர் வேட்பாளராக இருக்கும் இடங்களில் பா.ம.க. நிர்வாகிகள் யாரும் சரிவர ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று பேச்சு அடிபடுகிறது.

இந்த சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டினார் எடப்பாடி பழனிசாமி. இன்று காலை முதல் செய்ய வேண்டிய பிரசாரத்தை நிறுத்திவிட்டு மதியம்தான் தொடங்கினார்.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பழனிசாமியிடம், ‘எங்கள் வேட்பாளர் சாம் பாலுக்கு ஆதரவாக நீங்கள் பிரசாரம் செய்கிறீர்கள். ஆனால், மற்ற அ.தி.மு.க. தலைவர்கள் எட்டிப் பார்க்கவே இல்லை’ என்று குற்றம் சுமத்தினார்களாம்.

உடனே எடப்பாடி, ‘ஏன் பிரசாரத்துக்கு ராமதாஸ் வரமாட்டாராமா? முதல்ல அவரை வரச்சொல்லுங்க...’ என்று கடுப்படித்து கிளம்பிவிட்டாராம். திடீரென முதல்வர் இப்படி பேசுவார் என்பதை எதிர்பார்க்காத சாம் பால் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டாராம். ஆமா, ராமதாஸ் ஏன் பிரசாரம் பண்ண வரல..?