ரவீந்திரநாத்தை திட்டுனா, ராமகோபாலனுக்கு என்னமா கோபம் வருது!

அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரும் துனை முதல்வரின் புதல்வருமான ரவீந்திரநாத் இந்து முன்னணி கூட்டத்தில் பங்கேற்று, நாம் முதலில் இந்து என்று திருவாய் மலர்ந்து பேசினார்.


இந்த தத்துவம்தான், இந்துத்துவ அரசியல். அதை நடைமுறைபடுத்தவே பா.ஜ.க. அதிகார அரசியலோடு செயல்பட்டு வருகிறது. அதனால் அ.தி.மு.க. உறுப்பினர் என்பதில் இருந்து பா.ஜ.க. உறுப்பினராக ரவீந்திரநாத் மாறிவிட்டார் என்று கருத்துக்களுக்கு எதிராக கடும் கோபத்தைக் கக்கியிருக்கிறார் இந்து முன்னணி ராமகோபாலன். இதோ அவரது அறிக்கை.

கடந்த 36 ஆண்டுகளாக இந்து சமுதாயத்தை அரசியல், சாதி, மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமைப்படுத்த விநாயகர் சதுர்த்தி திருவிழாவை வெற்றிகரமாக இந்து முன்னணி நடத்தி வருகிறது. இவ்விழாவில் அனைத்து ஆன்மீக பெரியோர்களும், சமுதாய தலைவர்களும், அரசியல் தலைவர்களும் எந்த பேதமும் இல்லாமல் கலந்துகொள்கிறார்கள்.

தேனியில் நடைபெற்ற விழாவில் அதிமுக கட்சியைச் சேர்ந்த, அப்பகுதி எம்.பி. ரவீந்திரநாத் அவர்கள் கலந்துகொண்டு, இந்துவாக வாழ்வோம் என சமுதாய ஒற்றுமை குறித்து பேசினார். இதனை திரித்து சில அரசியல்வாதிகள், திராவிட அமைப்புகள், தனி நபர்கள் சிலர் சமூக வளைத்தளத்தில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

முஸ்லீம்கள் தங்களை முஸ்லீம்கள் என்று கூறும்போதும், கிறிஸ்தவர்கள் தங்களை கிறிஸ்துவர்கள் என கூறும்போதும், அவர்கள் விழாவில் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுபவர்களும் அதே கருத்தை வலியுறுத்திப் பேசும்போதும் எழாத விமர்சனங்கள், இந்து விழாவின் போது ஏன் செய்கிறார்கள்? 

இந்து என்பது இந்த நாட்டின் பண்பாட்டு அடையாளம் என உச்சநீதி மன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்துக்கள் ஒருபோதும் மற்ற மதத்தினர்மீது, நாட்டின் மீது ஆக்கிரமித்ததோ, அழித்ததோ கிடையாது. இந்துக்களால் தான் ஜனநாயகம், கருத்து சுதந்திரம், அமைதி இந்த நாட்டில் இருந்து வருகிறது என்பதை மறந்துவிட வேண்டாம் என்று கொந்தளித்திருக்கிறார் இராம.கோபாலன்.

பேசாம, இவரை தமிழக பா.ஜ.க. தலைவராக்கிடுங்கப்பா..!