ஆலய வழிபாட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும்  தமிழக அரசை கண்டித்து ஒற்றைக் காலில் நிற்கும் போராட்டம் நடைபெறும் - இராமகோபாலன்

ஆலய வழிபாட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடும்  தமிழக அரசை கண்டித்து, இந்து முன்னணி சார்பில் பக்தர்களை ஒருங்கிணைத்து, கோவில் முன்பு ஒற்றைக் காலில் நிற்கும் போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராமகோபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.


தொடர் ஊரடங்கால் மக்கள் மனங்களில் உள்ள அழுத்தம் குறைய ஆலய வழிபாடு அவசியம் என கடந்த மே 26ம் தேதி கோயில் முன்பு சமூக இடைவெளியோடு தோப்புக்கரணம் போடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தியது. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

அதன் காரணமாக தமிழக அரசு ஜூன் 3ஆம் தேதி அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து கருத்து கேட்டது. விரைவாக வழிபாட்டுத் தலங்களை திறக்க முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு உறுதி கூறியது. ஆனால், கருத்து கேட்பு என்பது கண்துடைப்பு நாடகம் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. 

 இன்று புதுச்சேரி, கேரளா உட்பட பல மாநிலங்களில் கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து, மக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. உலக புகழ்பெற்ற திருப்பதியில் வருகின்ற 11ஆம் தேதி முதல் தினசரி சில ஆயிரம் பேர் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் வழிகாட்டுத்தலின்படி ஆலயங்கள் திறக்க அனுமதிக்கவில்லை என்று கூறிவந்த தமிழக அரசு, மத்திய அரசு அனுமதி அளித்தும் ஆலயங்களைத் திறக்க அனுமதி மறுப்பது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

அரசுக்கு கோவில்களைத் திறக்க மனமில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் தோல்வி அடைந்து வரும் நிலையில், அதனை மூடி மறைக்கவே அரசு, ஆலய திறப்பை தள்ளி வைக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது.

கோவில்களை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கத்திற்கு வலிமையாக கொண்டு சேர்க்கும் வகையில் வருகின்ற ஜூன் 10 ம்தேதி புதன்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்கள் முன்பும், பொது மக்களையும் ஒன்றிணைத்து இந்து முன்னணி சார்பில் ஒற்றைக்காலில் நின்று  பிரார்த்தனைப் போராட்டம் நடைபெறும்என்று இராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.