தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி - வன்னியர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட தொடர் போராட்டம், இதுவரை 5 கட்டங்களாக மொத்தம் 8 நாட்களைக் கடந்து பேரெழுச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று இணைய வழியில் நடைபெற்றது.
பொங்கல் முடிந்ததும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும்... பாட்டாளி மக்கள் கட்சி - சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்றார். பா.ம.க. அரசியல் ஆலோசனைக்குழுத் தலைவர் பேராசிரியர் தீரன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, சமூக முன்னேற்ற சங்கத் தலைவர் ச. சிவப்பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, கீழ்க்கண்ட தீர்மானம் அனைத்து உறுப்பினர்களின் முழுமையான ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு வன்னியர் சங்கம் போராடி, பல தியாகங்களை செய்து பெற்றது என்றாலும், அந்த இட ஒதுக்கீட்டை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அந்த நல்லெண்ணத்துடன் 20% இட ஒதுக்கீட்டில் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு ஒரு பகுதியையும், வன்னியர்களுக்கு பெரும்பகுதியையும் ஒதுக்கீடு செய்யும் வகையில் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை சற்று தளர்த்திக் கொண்டு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் அய்யா ஒப்புதல் அளித்தார்.
அதனடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துமாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்கள் தலைமையில்,
வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் திரு.ஏ.கே மூர்த்தி, புதுவை மாநில அமைப்பாளர் முனைவர் கோ.தன்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு குழு பேச்சு நடத்தியது. அதன் தொடர்ச்சியாக மூத்த அமைச்சர்கள் குழு நாளை மறுநாள் திங்கள்கிழமை மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசுவர் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு 1989ஆம் ஆண்டே தீர்வு காணப்பட்டு இருக்க வேண்டும். அப்போது கலைஞர் அடுக்கடுக்காக செய்த துரோகங்களின் விளைவாக வன்னியர்களுக்கு இன்று வரை உரிய சமூகநீதி கிடைக்கவில்லை. வன்னியர்களுக்குரிய சமூகநீதியை இனியும் அரசு மறுப்பது நியாயமாக இருக்காது.
மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் போராடி, எண்ணற்ற தியாகங்களைச் செய்து பெற்ற 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த மருத்துவர் அய்யா அவர்கள், இப்போது உள் ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில்,
அதை பயன்படுத்திக் கொண்டு, வன்னியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் நிறைவேற்ற வேண்டும். இதையே முக்கிய வேண்டுகோளாக தமிழக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு முன்வைக்கிறது.
தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களின் சமூகநீதிக்கான, பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நியாயமான, எளிய கோரிக்கையை பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது.
அவ்வாறு செய்ய தாமதமானால் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக்கட்ட முடிவை எடுப்பது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு தீர்மானித்துள்ளது.