பத்திரிகையாளர்களிடம் ஒரு வேண்டுகோள்.! அன்புமணியை எப்படியாவது முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கள் - ராமதாஸ்.

பத்திரிகையாளர்கள், மரம் வெட்டியது பற்றி கேள்வி கேட்டால் இனிமேல் அவர்களை வெட்டுங்கள் என்று அன்பு போதிக்கும் டாக்டர் ராமதாஸ், இப்போது பத்திரிகையாளர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.


அதாவது, வெளிநாடு போன்று, இங்கேயும் ஊடகவியலார்கள் ஒன்றுசேர்ந்து, அறிவு நிறைந்த அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமாம். இதோ அவரது வேண்டுகோளின் சுருக்கப்பட்ட பதிவு. 

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்கள், தொலைநோக்குப் பார்வை, அறிவார்ந்த தலைமை என அனைத்திலும் சிறந்து விளங்கும் பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டை ஆண்டால், அது தமிழ்நாட்டை எந்த அளவுக்கு வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு கொண்டு செல்லும் கடமை ஊடகங்களுக்கு உண்டு.

தமிழ்நாட்டுக்கு எது நன்மை? என்பது குறித்து மக்களுக்கு பரிந்துரைக்க வேண்டியது ஊடகங்களின் கடமை. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஊடகங்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது தான் தமிழகத்திற்கு ஊடகங்கள் செய்யும் பெரும் நன்மையாக இருக்கும்.

உக்ரைன் நாட்டிலும், நியுசிலாந்திலும் ஊடகங்கள் இவ்வாறு செய்ததன் பயனாக அங்குள்ள மக்களுக்கு மிகச் சிறந்த ஆட்சிகள் கிடைத்திருக்கின்றன. 

உக்ரைன் நாட்டின் தற்போதைய அதிபரான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்ட போது அவருக்கு வயது வெறும் 41 தான். அவருக்கு பெரிய அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. அவர் அரசியலுக்கு வந்ததே விபத்து தான். அவர் அடிப்படையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர்.

திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, 2015&ஆம் ஆண்டில் ‘Servant of People’ என்ற தொலைக்காட்சித் தொடரில் உக்ரைன் நாட்டு அதிபராக நடித்தார். அப்போது உக்ரைன் அதிபராக இருந்த பெட்ரோ பொராஷன்கோ மக்களை மதிக்காமல் ஆட்சி செய்து கொண்டிருந்தார்.

தொலைக்காட்சித் தொடரில் நடித்த பிறகு மக்கள் நலனுக்கான பல திட்டங்களை அவர் முன் வைத்தார். தொடர்ந்து தேர்தலுக்கு ஓராண்டு முன்பாக 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் புதிய கட்சியைத் தொடங்கினார். அவரது கட்சியின் பெயர் வேடிக்கையானது. அக்கட்சியின் பெயர்.... ‘Servant of People’. ஆம்... தமக்கு புகழ்தேடி தந்த தொலைக்காட்சித் தொடரின் பெயரையே கட்சிக்கும் வைத்தார். உக்ரைன் நாட்டின் முன்னேற்றத்துக்கான செயல்திட்டங்களை மக்கள் முன்வைத்த அவர், ஒருமுறை மட்டும் தான் அதிபராக இருப்பேன் என்று உறுதியளித்தார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது சமூக ஊடகங்களை மட்டுமே பயன்படுத்திய அவர், ஊடகங்களை பிரச்சாரத்துக்கு அழைக்கவே இல்லை. ஆனாலும் அவரது கொள்கைகளும், செயல்திட்டங்களும் சிறப்பாக இருந்ததால் ஊடகங்கள் அவரை அதிபராக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தன. அவரும் 73.22% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தமது செயல்திட்டங்களை சமரசமின்றி, செயல்படுத்தி வருவதால் உக்ரைனில் அவருக்கு செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உள்நாட்டில் எடுத்துக் கொண்டால், தில்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் யாரென்று மக்களுக்குத் தெரியாது. ஊழலுக்கு எதிராகவும், லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டுமென்றும் வலியுறுத்தி பெரியவர் அண்ணா ஹசாரே தில்லியில் நடத்திய சாகும்வரை உண்ணாநிலை போராட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவர் என்பது மட்டும் தான் அவரைப் பற்றி மற்றவர்களுக்கு தெரிந்த விஷயம்.

ஆனால், அவருக்கு திடமான ஆதரவு தந்ததவர்கள் நீங்கள் தான். மாற்றத்தை ஏற்படுத்த அர்விந்த் கெஜ்ரிவாலால் முடியும் என்று அவருக்காக நீங்கள் தான் பிரச்சாரம் செய்தனர். உங்களின் பிரச்சாரத்தால் மட்டுமே கடந்த 7 ஆண்டுகளில் தில்லியில் 3 முறை ஆட்சியமைத்துள்ளார்.

உக்ரைனிலும், நியுசிலாந்திலும் , தில்லியிலும் படைக்கப்பட்ட வரலாறு தமிழகத்திலும் படைக்கப் படுவது ஊடகக் கூட்டாளிகளின் கைகளில் தான் உள்ளது. உக்ரைன், நியுசிலாந்து ஆகிய நாடுகளின் இப்போதைய தலைவர்களையும், தில்லி முதலமைச்சரையும் விட சிறப்பான கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களையும் பா.ம.கவும், மருத்துவர் அன்புமணி இராமதாசும் கொண்டிருக்கின்றனர்.

2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட மருத்துவர் அன்புமணி இராமதாஸ், உக்ரைன் அதிபர் கேட்டதைப் போல, தமக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பு வழங்கும்படி கூறினார். அப்போது அவரைத் திறமைகளின் அடிப்படையில் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் என ஊடகங்கள் முன்மொழிந்திருக்க வேண்டும்.

இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டை காங்கிரஸ் கட்சி 20 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. 1967-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இதுவரை 5 தேர்தல்களில் வெற்றி பெற்று 22 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அதிமுக 1977-ஆம் ஆண்டு முதல் இன்று வரை 7 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று 30-ஆவது ஆண்டாக ஆட்சிப் பொறுப்பில் தொடர்கிறது.

அத்தனை ஆண்டுகால ஆட்சிகளில் செயல்படுத்தப்பட்டதை விட சிறப்பான திட்டங்களை மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பொதுவெளியில் முன்வைத்த நிலையில், அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து பார்க்கலாம் என்று மக்களுக்கு ஊடகங்கள் பரிந்துரைத்திருக்க வேண்டும். ஊடகங்களுக்கு அந்தக் கடமை உள்ளது.

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களை கருணை அடிப்படையிலோ, வேறு அடிப்படையிலோ மக்களிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்கவில்லை. திறமையை பரிசோதித்துப் பார்த்து, அதில் அவர் தேர்ச்சி பெற்றால் மட்டும் பரிந்துரை செய்தால் போதும். தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கும் அனைவரையும் அழைத்து, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நன்மைகளுக்காகவும் என்னென்ன செயல்திட்டங்களை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து விவாதம் நடத்த ஊடகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். இதை பலமுறை நான் கூறியுள்ளேன்.

ஊடகங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதத்தில் வெற்றி பெறும் வேட்பாளரை ஊடகத்துறையின் வேட்பாளராக முன்னிறுத்தலாம். அப்படி செய்தால் அது உலக அளவில் முன்மாதிரியாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.