ராமதாஸ் பிரதமர் மோடியை சந்திக்க அனைத்துக்கட்சி குழுவுக்கு அழைப்பு.. ஆனால், அவர் மட்டும் வரவே மாட்டார்.

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்த ஆணையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டாவது சமூகநீதி மலரும் என எதிர்பார்த்த நிலையில் இத்தீர்ப்பு மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.


மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் போது, அதில் பிற பிற்படுத்தப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. அதை எதிர்த்து அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும், பிற கட்சிகள் சார்பிலும் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்,‘‘ மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை.

இட ஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க குழு அமைத்து 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும்; ஆனாலும் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது’’ என ஆணையிட்டிருந்தது. அதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது தான் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்திருக்கிறது. இது சமூகநீதிக்கு பின்னடைவாகும்.

உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாது என்று மத்திய அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது தான் இப்படி ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு காரணம் ஆகும். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது ஆகும். அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறி விட்டது.

அதை மதித்து நடப்பாண்டிலேயே இட ஒதுக்கீட்டை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருந்தால், அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆணையிட்டிருக்கும். அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், சமபந்தமே இல்லாத வழக்குகளைக் காரணம் காட்டி நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்ற மத்திய அரசு நிலைப்பாடு எடுத்தது தான் இந்த பின்னடைவுக்கு காரணம் ஆகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, 27% இடஓதுக்கீட்டை செயல்படுத்த தயாராக இருப்பதாக மத்திய அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், 50% இட ஒதுக்கீட்டை திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியதால் தான், இட ஒதுக்கீட்டின் அளவு குறித்து முடிவெடுக்க குழுவை அமைக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது;

அதனால் தான் நடப்பாண்டில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு 27% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்ற நிலையில், அதை அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்தியிருந்தால் நடப்பாண்டிலேயே 27% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்திருக்கும். அதற்கான வாய்ப்பு திட்டமிட்டே முறியடிக்கப்பட்டது.

எனவே, இன்னும் சில நாட்களில் தொடங்கவிருக்கும் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வை நிறுத்தி வைத்து, அடுத்த சில நாட்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுத்து உடனடியாக செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசு நினைத்தால் இது சாத்தியம் தான். இந்தக் கோரிக்கையை தமிழ்நாட்டிலிருந்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவை தில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அழைத்துச்செல்வதாக இருந்தால் பா.ம.க. சார்பில் ஜி.கே.மணியைத்தான் அனுப்புவார் ராமதாஸ். ஏனென்றால், சொந்த மகன் அன்புமணியை நாடாளுமன்றத்துக்குக்கூட அனுப்பாமல் வீட்டில் வைத்து பாதுகாப்பவர் ஆயிற்றே.