புதிய தலைமுறை ஓனர் கல்லூரியில் 6 தற்கொலைகள்: சிபிஐ விசாரணை கேட்கும் இராமதாஸ்!

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக் குழும உரிமையாளர் பச்சமுத்துவுக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உள்ளது.


இதில் மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொள்வது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளவேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.” இங்கு பி.டெக் இரண்டாமாண்டு பயின்று வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷி ராணா என்ற மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஓராண்டில் 6&ஆவது மாணவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அங்கு பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது. “ என்று அவர் கூறியுள்ளார். ” பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுஷி ராணா பி.டெக் உயிரி தொழில்நுட்பம் பயின்று வந்தார். சனிக் கிழமை பிற்பகலில் விடுதி அறைக்குள் சென்ற மாணவி ஆயுஷி அன்று இரவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு நம்பக் கூடிய வகையில் எந்த பதிலும் கிடைக்கவில்லை. விடுதி அறையில் தங்கியிருந்த ஆயுஷி ராணா, விடுதிக்கு வெளியில் சென்று தங்கியிருந்ததால், அவரை அவரது பெற்றோர் திட்டியதாகவும், அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக பெற்றோர் திட்டியதால் தூக்கில் தொங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும், உண்மையான காரணம் என்ன? என்பது இப்போது வரை உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்வது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அனிஸ் சவுத்ரி, சென்னையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த மாணவி அனுப்பிரியா, கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவர் ராகவ் ஆகியோர் உட்பட 5 பேர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஐவரின் தற்கொலைக்குமே தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக பெற்றோர் திட்டியது தான் காரணம் என்று கூறி வழக்குகள் முடிக்கப்பட்டன. இவை நம்பும்படியாக இல்லை என்பதே உண்மை. மாணவி ஆயுஷி ராணா சனிக்கிழமை பிற்பகல் அறைக்குள் சென்ற நிலையில், இரவு 9.00 மணிக்கு பிறகும் அவர் வெளியில் வரவில்லை என்பதையோ,

இடைப்பட்ட சுமார் 8.00 மணி நேரத்தில் அவரது அறையில் தங்கியிருந்த சக மாணவிகள் எவரும் அறைக்குள் செல்லவில்லை என்பதையோ, சன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடியுமா? என்பதையோ சந்தேகக் கண் கொண்டு பார்க்காமல் கடந்து சென்று விட முடியாது. ஆனால், உள்ளூர் காவல்துறையினர் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுவது தான் வேதம் என்று கருதி,

அனைத்து நிகழ்வுகளையும் தற்கொலை வழக்காகவே பதிவு செய்வதுடன் தங்கள் பணியை முடித்துக் கொள்வது மிகவும் வியப்பாக உள்ளது. உள்ளூர் காவல்துறையினரின் விசாரணையில் நம்பிக்கை இல்லாமல், எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழக தற்கொலை சாவுகள் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு கடந்த ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி காவல்துறை தலைமை இயக்குனர் திரிபாதி ஆணையிட்டார்.

சிபிசிஐடி கண்காணிப்பாளர் மல்லிகா தலைமையிலான படையினர் பல நாட்கள் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டு விசாரித்த போதிலும், அதில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து வெளிப்படையாக எந்த தகவலும் இல்லை. விசாரணை கிணற்றில் போட்ட கல்லாகவே உள்ளது. எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடந்தவை அனைத்தும் தற்கொலையாகவே இருந்தாலும் கூட, அதற்காக சொல்லப்படும் ரெடிமேடு காரணங்கள் நம்பும்படியாக இல்லை.

இதுகுறித்த செய்திகள் பெரும்பான்மையான ஊடகங்களில் வெளியாகாதவாறு மறைக்கப்படுவது ஐயத்தை அதிகரிக்கிறது. எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனங்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் நிலையில், அது தொடர்பாக அம்மாணவர்களின் குடும்பத்தினரிடம் நிலவி வரும் அச்சத்தையும், ஐயங்களையும் வெளிப்படையான விசாரணை மூலம் போக்க வேண்டியது தமிழக காவல்துறையின் கடமை ஆகும்.

ஒரு கல்வி நிலைய வளாகம் என்பது கற்றலும், ஒழுக்கமும் நிறைந்ததாக திகழ வேண்டும். ஆனால், சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக வளாகத்தில் தடை செய்யப்பட்ட போதை மருந்துகள் தாராளமாக புழங்கும் மையமாக விளங்குகிறது. இம்மாதத் தொடக்கத்தில் அந்த பல்கலைக்கழக வளாகத்தில் இரு பிரிவு மாணவர்கள் துப்பாக்கிகள், பட்டாக்கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சண்டையிட்டுக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் செயல்பட்டு வரும் எந்த கல்வி நிறுவனங்களிலும் இந்த அலவுக்கு தற்கொலைகளோ, வன்முறை கலாச்சாரமோ நிலவவில்லை. பழைய மாமல்லபுரம் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பள்ளிக்கூடத்திற்கு இணையான கண்டிப்பும், கட்டுப்பாடும் நிலவுகிறது. மாறாக, இப்பல்கலைக்கழகம் தற்கொலைகளின் மையமாகவும், வன்முறைகளின் கூடாரமாகவும், சட்டவிரோத போதைமருந்து சந்தையாகவும் திகழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

எஸ்.ஆர்.எம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த தற்கொலைகளை மட்டும் தனித்த நிகழ்வுகளாக பார்க்க முடியாது. அங்கு நடைபெறும் பிற சட்டவிரோத செயல்களுக்கும், தற்கொலைகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பலர் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு சென்றும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அதற்கு வசதியாக எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக தற்கொலை சாவுகள் மற்றும் அங்கு நிகழ்ந்த பிற சட்டவிரோத செயல்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.” என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இராமதாசு கூறியுள்ளார்.