முதல்ல வன்னியர்களுக்கு 20% கொடுங்க, இல்லைன்னா போராட்டம்தான். ராமதாஸ் ஆரவார அறிவிப்பு.

தமிழக தேர்தல் பக்கத்தில் நெருங்கும் நேரத்தில்தான் பலருக்கும் தங்கள் சார்ந்த இனத்துக்கும், மக்களுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிவரும். அதுவரை அமைதியாக கூட்டணி தர்மம் என்று வாயைப் பொத்திக் கொள்வார்கள். அவர்களில் முக்கியமானவர் டாக்டர் ராமதாஸ்.


அதன்படி, இணையவழியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது பா.ம.க. அதில் சிறப்பான சிலவற்றை மட்டும் பார்க்கலாம். 

தீர்மானம் 1 : “தமிழ்நாட்டு அரசுப் பணிகள் தமிழர்களுக்கே” - புதிய சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அரசுப் பணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், வேலை தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் படித்த இளைஞர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்வதன் மூலம் தான் இந்நிலையை மாற்றி, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்கள் சேர்வது அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு பணிகளில் தான் பிற மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வந்தார்கள். அதனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

பிற மாநிலத்தவரை பணியில் அமர்த்துவதற்காகவே பொதுத்துறை நிறுவனங்களின் பணி நியமனங்களில் திட்டமிட்டு குளறுபடிகள் நிகழ்த்தப்படுகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட அஞ்சல்துறை பணிக்கான போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழிக்கான தேர்வுகளில் தமிழே தெரியாத ஹரியானா மாணவர்கள் முதல் இடங்களைக் கைப்பற்றியதாக அறிவித்து, அவர்களுக்கு பணி நியமனம் வழங்கிய கொடுமை நிகழ்ந்தது. 

இத்தகைய சூழலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்றால், அது மாநில அரசு பணிகள் மட்டும் தான் என்ற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இப்போது தமிழக அரசு பணிகளிலேயே மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழக அரசின் பணி நியமனம் தொடர்பான சட்டங்களில் அதற்கு வாய்ப்புகள் இருப்பதால் தான், பிற மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு அரசு பணிகளில் ஊடுருவுகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் இந்த சிக்கலுக்கு மத்தியப்பிரதேச அரசு வழிகாட்டியிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசுப் பணிகளும் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்றும், அதற்கான சட்டத்திருத்தங்கள் செய்யப்படும் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்திருக்கிறார். உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாதுகாக்கும் நோக்கத்துடன் மத்தியப் பிரதேச அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதாகும்.

அதேபோல், தமிழ்நாட்டில் அனைத்து அரசு பணிகளும் முழுக்க முழுக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை வரும் 14&ஆம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்திலுள்ள அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களிலும் அதிகாரிகள் நிலை தவிர்த்து மீதமுள்ள பணியாளர் பணியிடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிரப்பவும், தமிழகத்திலுள்ள மத்திய அரசு அலுவலகங்களில் கடைநிலைப் பணிகள் அனைத்தையும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரும்படி இப்பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 2 : தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமுதாயம் என்றால் அது வன்னியர்கள் சமுதாயம் தான். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள அச்சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காகத் தான், வன்னியர் சமுதாயத்திற்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 1980&ஆம் ஆண்டில் தொடங்கி 1989-ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் வன்னியர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியது.

1987-ஆம் ஆண்டு தொடர்சாலை மறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்கள் காக்கை, குருவிகளைப் போன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். அதன்பிறகு வன்னியர்கள் செய்த தியாகத்தின் பயனாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு, 20% இட ஒதுக்கீடு வழங்கப் பட்டது. ஆனாலும், அதில் அப்போதைய ஆட்சியாளர்கள் செய்த துரோகங்களின் விளைவாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியருக்கு கிடைத்திருக்க வேண்டிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போனது.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு 31 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட போதிலும், தமிழக அரசுத்துறை பணிகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் 8 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. தமிழக மக்கள்தொகையில் 25% வன்னியர்கள் தான். முழுமையான சமூகநீதியின் அடிப்படையில் அரசுத்துறை பணிகளில் 25% இடங்கள் வன்னிய மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்கு கூட கிடைக்கவில்லை.

உயர்பதவிகளில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மோசமாக உள்ளது. குரூப் 1 எனப்படும் முதல் தொகுதி அதிகாரிகளில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் 2% முதல் 3% மட்டுமே. இது வன்னியர் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டுக்கும் குறைவாகும். அதேபோல், இரண்டாம் தொகுதி அதிகாரிகளில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் வெறும் 6% முதல் 8% மட்டுமே. நான்காம் தொகுதி பணியாளர்களில் வன்னியர்களின் விகிதம் 7% முதல் 9% மட்டும் தான்.

வன்னியர்களை உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவால் வன்னியர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் வன்னிய மக்களின் சமூக நிலை மேலும் பாதிக்கப்படுமே தவிர, ஒரு போதும் முன்னேற்றமடையாது.

கல்வி மற்றும் சமூகரீதியில் வன்னியர்கள் முன்னேற வேண்டும் என்றால், அவர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவது மட்டும் தான் ஒரே தீர்வு ஆகும். வன்னியர்களின் கல்வி, சமூக, வேலை வாய்ப்பு நிலைகள் இந்தக் கோரிக்கைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் உள்ளன. வன்னிய மக்கள் கல்வி, சமூக நிலையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை கடந்த காலங்களில் சட்டநாதன் மற்றும் அம்பாசங்கர் ஆணையங்கள் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளன.

எனவே, தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், நீதியரசர் தணிகாச்சலம் தலைமையிலான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை அறிக்கையைப் பெற்று வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்; அதற்கான தனிச் சட்டத்தை சட்டப்பேரவையில் விரைவாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 : மத்திய அரசின் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டில் தொகுப்பு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இட ஒதுக்கீடு பிற பிற்படுத்தப் பட்டோர் வகுப்பிலுள்ள அனைத்து சாதியினருக்கும் பயனளிக்கவில்லை; மொத்தமுள்ள 2633 சாதிகளில் வெறும் 10 சாதிகள் மட்டும், ஓபிசி வகுப்புக்கான 27% ஒதுக்கீட்டில், 25 விழுக்காட்டை, அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 6.75% ஒதுக்கீட்டைக் கைப்பற்றிக் கொள்கின்றன; 983 சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டின் பயன்கள் இன்று வரை கிடைக்கவில்லை என்று 27% ஓபிசி இட ஒதுக்கீட்டின் பயன்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நீதிபதி ரோகிணி ஆணையம் கண்டறிந்திருக்கிறது.

27% இட ஒதுக்கீட்டின் பயன்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள 2633 சாதிகளுக்கும் பயனளிப்பதை உறுதி செய்யும் வகையில் 27% இட ஒதுக்கீட்டை 10+10+7 என மூன்று பிரிவுகளாக பிரித்து வழங்கலாம் என்றும் நீதிபதி ரோகிணி ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது. இந்த யோசனையை அந்த ஆணையம் இறுதி பரிந்துரையாக வழங்கினால் மட்டும் தான் செயல்படுத்த முடியும்.

ஆணையம் அமைக்கப்பட்டு 35 மாதங்கள் ஆகும் நிலையில், உடனடியாக நீதிபதி ரோகிணி ஆணைய அறிக்கையை பெற்று, அதனடிப்படையில் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இதுபோன்று மேலும் பல தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறார் ராமதாஸ். இவை எல்லாமே தேர்தலுக்காக என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன..?