அப்போதும் இப்போதும் எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான்! நிரூபித்த 2.0 ரிசர்வேசன்!

ரஜினி படமான 2.0 டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விறுவிறுவென பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.


   கடந்த 2015ம் ஆண்டு தொடங்கிய 2.ஓ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில் கிராபிக்ஸ் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக படம் சுமார் இரண்டு ஆண்டுகள் தாமதமாக வரும் 29ந் தேதி வெளியாக உள்ளது. இந்திய திரையுலகிலேயே முதல் முறையாக சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் 2.ஓ திரைப்படம் தயாராகியுள்ளது. ரஜினி, அக்சய் குமார் ஆகியோர் நடித்துள்ள படத்தை ஷங்கர் இயக்கியுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

   2,ஓ படத்தின் வெளிநாடு மற்றும் வெளிமாநில விநியோக உரிமை ஹாட் கேக்காக விற்பனையானது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கூடுதல் விலை சொல்லப்பட்டதால் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. இதன் பிறகு படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பிடித்தது தயாரிப்பு நிறுவனமான லைக்கா. இதனை தொடர்ந்து பேரம் பேசி 2.ஓ படத்தை விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் 2.ஓ திரைப்படம் வெளியாக உள்ளது.

   3டி தொழில்நுட்பத்திலும் வெளியாக உள்ள 2.ஓ படத்தை பார்க்க ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் தான் படத்தின் ரிசர்வேசன் சென்னையில் தொடங்கியுள்ளது. ஆன்லைன் மற்றும் கவுண்டர் மூலமான புக்கிங் தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகள் சுடச்சுட விற்பனையாகி வருகின்றன. மாயாஜால் திரையரங்கில் தற்போதைக்கு 25 காட்சிகளுக்கு புக்கிக் ஓபன் ஆனது. அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது. வெறித்தனமான ரஜினி ரசிகர்களுக்கு ஒவ்வொரு திரையரங்கிலும் அதிகாலை 4 மணி காட்சி ஒளிபரப்பாக உள்ளது. இதனால் ரஜினியின் தீவிர ரசிகர்கள் ரசிகர் மன்ற காட்சிக்கான டிக்கெட்டுகளை வாங்கி குவிக்க ஆரம்பித்துவிட்டனர்.   படம் வியாழக்கிழமை வெளியாக உள்ளதும், அன்றைய தினம் விடுமுறை இல்லை என்பதுமே ரிசர்வேசனை எந்த அளவிலும் பாதிக்கவில்லை. மேலும் ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் 2.ஓ படத்திற்கான கிரேஸ் ரசிகர்களுக்கு குறையாததே ரிசர்வேசன் சுறுசுறுப்பாக இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.


   சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்குகளிலும் கவுண்டர் மூலமாக டிக்கெட் முன்பதிவு நடைபெற்ற நிலையில் சில மணி நேரங்களில் டிக்கெட் விற்றுவிட்டதாக போர்டு வைக்கப்பட்டுவிட்டது. இதே போலத்தான் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் 2.ஓ படத்திற்கான டிக்கெட் சுறுசுறுப்பாக விற்பனையாகி வருவதாகவும், இதன் மூலம் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக சினிமா வர்த்தகர்கள் கூறுகின்றனர்.