ரஜினியின் இஸ்லாம் பேச்சுக்கு முஸ்லீம் லீக் கண்டனம்..! அமீத் ஷாவின் குரலாகப் பேசுகிறார் ரஜினி!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். ஆனால், இந்த சட்டத்தை திரும்ப பெற முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா பிடிவாதமாக கூறிவருகிறார்.


ஆனாலும் மக்களும், மாணவர்களும் நாடு முழுவதும் அமைதியாக போராடி வருகிறார்கள். இந்த நிலையில் இந்தப் போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்தி இருப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம் தெரிவித்துள்ளார்.  

பாராளுமன்றத்தில சி.ஏ.ஏ. சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதற்கு ஆதரவாக வாக்களித்த பல்வேறு கட்சிகளும் தற்போது தங்களது தவறை உணர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மக்களிடையை பிளவை ஏற்படுத்தும் இந்த சட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்து போராடி வரும்நிலையில் மாணவர்களும் தாமாக முன்வந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த போராட்டங்களை சீர்குலைக்கும் வகையில் மதவாத சக்திகளால் சில நபர்கள் தூண்டிவிடப்பட்டு துப்பாக்கி சூடு நடத்திய சம்பவங்கள் அரங்கேறி உள்ளது.

இந்த சம்பவங்களை எல்லாம் நடிகர் ரஜினிகாந்த் கண்டிக்காமல் மாணவர்களை அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்துவதாக தெரிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. என்ஆர்சி குறித்து முழுமையான புரிதல் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார் என்பது அவரது பேட்டியில் தெரிகிறது. இஸ்லாமியர்களை இந்த நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்ற ரீதியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு ரஜினி துணை போகக்கூடாது என்று கண்டனம் தெரிவிக்கிறார்.