ரஜினிகாந்த் சமீபத்தில் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை..

ரஜினிகாந்த் என்ன பேசினாலும், அது குறித்து பெரிய விவாதம் நடக்கும், ட்விட்டர், வாட்ஸ் ஆப் எல்லாமே பரபரக்கும். ஆனால், சமீபத்தில் அவர் எழுதிய சீரியஸ் கடிதத்தை யாருமே சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.


மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக விளங்கும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு கடந்த 13 ஆண்டுகளாக இயக்குநர் பதவி நிரப்பப்படாமலேயே இருந்தது. கடந்த தி.மு.க. காலத்திலும், இந்த அ.தி.மு.க. காலத்திலும் இந்த பதவி நிரப்பப்படவே இல்லை. 

அதே நேரம், அவ்வப்போது இந்தப் பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிவரும் ஆர்.சந்திரசேகரனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு இயக்குநர் பதவி நிரப்பப்பட்டது, பாராட்டத்தக்கது என்று கடிதம் எழுதியிருந்தார். 

மேலும் அந்த கடிதத்தில், ‘தமிழ் மொழியை மேம்படுத்துவதற்கு தாங்கள் மேற்கொள்ளும் பெருமுயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு முதல் இயக்குநராக ஆர்.சந்திரசேகரனை நியமித்ததற்கும் நன்றி தெரிவிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இவ்வளவு போதாதா உடனே, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்துக்கு தமிழில் பதில் அளித்துள்ளார். அதில், ‘நமது பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையில், பாரத தேசத்தின் எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதிகொண்டிருக்கிறோம். தமிழ்மொழியை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் மத்தியஅரசு பணிபுரிந்து வருகிறது என்பதை உங்களுக்கு உறுதிபடுத்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அடேங்கப்பா, அவர் பேச்சுக்கு இவர் பாராட்டு தெரிவிப்பதும், இவர் பேச்சுக்கு அவர் பாராட்டு தெரிவிப்பதும் நல்ல நாடகம் என்கிறார்க்ள்.

வழக்கமாக ட்ரெண்டிங் ஆகும் ரஜினியின் கடிதம், டிவீட் பற்றி யாரும் மூச்சுகூட விடவில்லை என்பதுதான் ஆச்சர்யம். ஒருவேளை மறந்துட்டானுங்களோ..? கொரோனா கொடூரம் தமிழகத்தில் தலைவிரித்து ஆடுகிறது. இதுதவிர, மின்சார கொள்ளை நடக்கிறது. ஆன்லைன் வகுப்பு அட்டூழியம், ஃபீஸ் கேட்கும் அநியாயம் நடக்கிறது. இவற்றை எல்லாம் விட்டுவிட்டு செம்மொழிக்கு பாராட்டு அவசியம்தானா என்று அவரது ரசிகர்களே கொந்தளிக்கின்றனர்.