ரஜினி வட்டிக்குப் பணம் கொடுத்தது ஆன்மிக குற்றமா..? இனி, ரஜினி ரசிகர்களுக்கு குறைந்த விலையில் வட்டிக்குப் பணம் கிடைக்குமாம்.

பாபா சேட் ரஜினி ஆரம்பித்த வட்டிக் கடை பிசினஸில் நஷ்டம் என்று கவலைப்பட்டு வருமான வரித்துறையில் தகவல் தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த். இந்த நிலையில், அவர் செய்த கந்துவட்டித் தொழில் நியாயமான ஆன்மிக தொழிலா என்று கேள்வி கேட்டு உலவும் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.


ரஜினி வட்டிக்கு விட்டது என்பது மீம்ஸ் போட்டு கடக்கும் சாதாரண விசயம் அல்ல. ஒரே வருடத்தில் கோடிக்கணக்கில் கடன் கொடுத்து லட்சக்கணக்கில் வட்டி வாங்கியிருக்கிறார். கொடுத்தவர்கள் சிலர் ஏமாற்றியதாக வட இந்திய பெயர்களைச் சொல்லியிருக்கிறார். 

தமிழகம் எங்கும் கந்து வட்டிக் கொடுமை நடக்கிறது. இதையொட்டி தற்கொலை சம்பவங்களும் நடக்கின்றன. திரையுலகிலும், நடிகர் சசிகுமாரின் நெருங்கிய உறவினர் கந்து வட்டி கொடுமை தாங்க முடியவில்லை என எழுதிவைத்தவிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

ஆக, ரஜினியிடம் குறைந்த வட்டிக்கு வாங்கியவர்கள், அதிகவட்டிக்கு (சட்டத்துக்குப் புறம்பாக) வட்டிக்கு விட்டார்களா என ஆராயப்பட வேண்டும். தன்னைப் பொறுத்தவரை நியாயமான சட்டத்துக்கு உட்பட்டுத்தான் வட்டிக்குக் கொடுத்தேன் என சொல்லி ரஜினி தப்பிக்க முடியாது. காரணம், அவர் பணம் கொடுத்தது கந்துவட்டிக் கும்பலுக்கா என்பதைச் சொல்லவேண்டிய தார்மீக கடமை அவருக்கு உண்டு. ஏனென்றால் சிஸ்டம் குறித்து அக்கறை கொண்டவர், அரசியலுக்கு வருவதாக சொல்பவர். 

தன்னிடம் வட்டிக்கு வாங்கிய சிலர் ஏமாற்றிவிட்டதாக ரஜினியே சொல்கிறார். அவர்களுக்குப் பதிலாக, சிரமப்படும் தனது ரசிகர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வட்டிக்குத் தரலாமே. இதற்காக முறையான நிதியம் அமைக்கலாமே. ரசிகர்களுக்கும் உதவி. தவிர அவர்கள் ரஜினியை ஏமாற்றாமல் திரும்பக் கொடுப்பார்கள்.

 ரஜினிக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வருமானவரித்துறை நீக்கிவிட்டதாக பலரும் நினைக்கிறார்கள். அதாவது ரஜினி தவறு செய்யவில்லை என நினைக்கிறார்கள். வருமானவரித் துறையை ரஜினி ஏமாற்றினார் என்றுதான் அவருக்கு 66 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதை மேலதிகாரியும் உறுதி செய்துள்ளார்.

இதை எதிர்த்து ரஜினி மனு கொடுக்கிறார். அது விசாரணையில் இருக்கிறது. அப்போதுதான், “ஒரு கோடிக்கும் குறைவான அபராதத் தொகைக்கான வழக்குகளால் செலவு அதிகமாகிறது. பெரிய வழக்குளை நடத்த சிரமம் ஏற்படுகிறது” என தள்ளுபடி செய்கிறது தீர்மானிக்கிறது. அதாவது சந்தேகத்தின் பலனால் குற்றவாளி விடுதலை ஆவதைப்போல! மற்றபடி ரஜினி, குற்றமற்றவர் என வருமான வரித்துறை சொல்லவில்லை.

இந்து மதம், “வட்டி வாங்கியவனுக்கு காச நோய் வரும்” என எச்சரிக்கிறது. கிறிஸ்துவ மதம், “வட்டிக்கு கொடுப்பவன் ஆண்டானாகவும் வாங்குபவன் அடிமையாகவும் துயருருகிறான்” என்கிறது. இஸ்லாமிய மதம், “வட்டிக்கு விடுதல் விபசாரத்துக்கு ஒப்பானது,” என்கிறது.

ஆக எந்த மதமும் வட்டியை ஏற்கவில்லை. ஆன்மிக அரசியல் பேசும் ரஜினி, இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறது அந்தப் பதிவு.