சவப்பெட்டியிலும் ரஜினிக்கு விளம்பரம்..! கிருஷ்ணகிரி ரசிகர்கள் அரங்கேற்றிய விபரீத செயல்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏழை, எளியவர்கள் உயிரிழந்தால் அவர்களுக்கு இலவச சவப்பெட்டி உதவி செய்து ரஜினி ரசிகர் மன்றத்தினர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.


அரசியலுக்கு இப்போது வருகிறேன், அப்போது வருகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது ஒரு வசனம் பேசினாலும், அவர் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி தமிழக மக்கள் கேட்டக் கொண்டுதான் இருக்கின்றனர். ஒரு சிலர் அவர் அரசியலுக்கு வரமாட்டார் என தீர்க்கமாக பேசி வருகின்றனர். இருந்தாலும் என்றாவது ஒரு நாள் தலைவர் அரசியலுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் பொது சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயிரிழக்கும் ஏழை, எளியோருக்கு குளிர்சாதனம் கொண்ட சவப்பெட்டி வாடகை இன்றி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற ஒரு முதியவர் இறந்துவிட்டார்.

இந்த தகவல் அறிந்த ரஜினி மக்கள் மன்றத்தினர் அந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வு முடிந்தபின் அந்த குளிர்சாதன சவப்பெட்டியில் அவரது உடலை பாதுகாத்து பின்னர் நல்லடக்கம் செய்தனர். இந்த தகவலை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர். 

ஆனால் எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் சிலர் அந்த சவப்பெட்டியில் பெரிய எழுத்துக்களாக எழுதப்பட்டிருந்த ரஜினி ரசிகர் மன்றம் என்ற வார்த்தையை பார்த்து, சவப்பெட்டியில் கூட விளம்பரம் தேடுகிறீர்களா என விமர்சனம் செய்துள்ளனர். ஒருசிலர் கட்சித் தொடங்குவது தாமதம் ஆனாலும் இப்போதே சேவை செய்யும் மனபோக்கு உள்ளதாக ரஜினி மக்கள் மன்றத்தினரை பாராட்டி உள்ளனர்.

தான் செய்யும் சேவையை விளம்பரப்படுத்திக்கொள்வதில் தவறு என்ன இருக்கிறது? அப்படி செய்தால்தானே அது யார் செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும் என சிலர் நியாயப்படுத்தி உள்ளனர்.