அரசியலுக்கு வரவேண்டாம் ரஜினி... ஆனால், ரசிகர்களின் இழப்புகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்..?

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று தன்னெழுச்சியாகப் போராடிய இளைஞர்கள் வீட்டுக்குச் சென்று சேர்வதற்குள், ‘நான் அரசியலுக்கு வரப்போவதே இல்லை‘ என்று மீண்டும் ஒரு முறை உறுதியாகத் தெரிவித்துவிட்டார் ரஜினி.


இப்போதும் ரஜினி ரசிகன் உண்மையில் எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான்... அவரது வீடியோ. அதை வெளியிட ஏன் தயங்குகிறார் என்பது புரியவில்லை என்றுதான் தவிக்கிறார்கள். ஏனென்றால், அவர் உடல்நிலை பற்றிய வதந்தி பரவிய நேரத்தில், அவர்தான், என் உயிரே போனாலும் வருவேன் என்று நம்பிக்கை கொடுத்தார்.

அப்பட் ஒரு வார்த்தை சொல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அவர் சொன்ன பிறகு நிர்வாகிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் செலவு செய்து பூத் கமிட்டி பணிகளில் தீவிரம் காட்டினார்கள். அடுத்த சில நாட்களில் வந்த பிறந்தநாளுக்கும் செலவு செய்தனர். ஆனால் அத்தனையையும் ஒரே அறிக்கையில் வீணடித்துவிட்டார். ரஜினி ரசிகர்கள் நடத்திய போராட்டமும் தண்டச்செலவுதான். 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதுதான் தொடர்கிறது. படங்களை ஓடவைக்கவும் மாஸ் காட்டவும் மட்டுமே அவருக்கு இவர்கள் தேவை. ரஜினி காரியக்காரர் தான்... ஆனால் குடும்பத்தை பார்க்காமல் அவருக்காக செலவு செய்து ஏமாறும் அப்பாவிகளை என்ன சொல்வது? இவர்களின் பொருளாதார இழப்புக்கு ரஜினி என்னதான் பதில் சொல்லப் போகிறார்..?