நேர்மையான ஒருவரை முதல்வராக்க ரஜினி ஆசை..! அப்படின்னா, ரஜினி நேர்மையானவர் இல்லையா..?

ஒருவழியாக என்னை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம், 8 கோடி மக்கள் படையையும் திரட்டிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஆதரவு தருவதாகச் சொல்லுங்கள். நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார்.


அதாவது எங்க தாத்தாவின் வழுக்கை தலையில் முடி முளைக்கட்டும், நான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டார். ஆனால், அதற்கு ரஜினி கொடுத்த பில்டப் இருக்கிறதே, தாங்கலடா சாமி.

நேர்மையான, துடிப்பான, திறமையான, தன்மானமுள்ள ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று சொல்கிறார். அப்படியென்றால், அந்தத் திறமை எல்லாம் ரஜினியிடம் இல்லையா என்று அவரது ரசிகனே கேள்வி கேட்கிறான். 

ரஜினி முதல்வராக மாட்டார், ஆனால் முதல்வரை கேள்வி கேட்கும் வகையில் கட்சித் தலைவராக இருப்பாராம். தன்னை முதல்வர் பதவியில் உட்காரவைத்த சசிகலாவுக்கு எடப்பாடி என்ன செய்தார் என்பது ரஜினிக்குத் தெரியாதா என்ன..?

மாற்றுக் கட்சியினருக்கு வாய்ப்பு கொடுப்போம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பதவிக்குக் கொண்டுவருவோம் என்று சொல்வதையும் கேட்டு கிண்டல் அடிக்கிறார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்தானே அரசாங்கத்தில் இருக்கிறார்கள். அவர்கள் இருக்கும்போது எதற்கு வெளியே இருந்து கொண்டுவர வேண்டும். காமராஜரும் அண்ணாவும் என்ன படித்து முதல்வர் ஆனார்கள்..?

கடைசியாக ஒரே ஒரு கேள்வி. இத்தனை நிருபர்களை கூட்டி அமரவைத்தது எதற்காக என்பதுதான். யாருடைய கேள்விக்கும் பதில் சொல்லப்போவதில்லை, வசனம் பேசிவிட்டு போகப்போகிறேன் என்றால், வீட்யோ வெளியிட்டால் போதுமே என்று நிருபர்கள் கொதிக்கிறார்கள்.

அட, போங்கப்பா அடுத்து ரஜினி கூப்புட்டாலும் இப்படித்தானே ஓடப்போறீங்க.