இளம்பெண் கொடூர கொலை! கொலையாளியை பிடிக்க உதவிய ரஜினி! செம் சுவாரஸ்யம்!

நெல்லூர்: ஆட்டோவில் ஒட்டியிருந்த ரஜினி ஸ்டிக்கரை வைத்து கொலையாளியை போலீசார் கண்டுபிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர், போந்திலி நிர்மலா பாய். 45 வயதான இவரது மகன், மகள் படிப்பு காரணமாக வெளியில் சென்றுவிட, தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் நிர்மலாவின் வீட்டில் இருந்து புகை வரவே, அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்துள்ளனர்.

அதில், அவர் உடல் கருகி உயிரிழந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, அவரது பிரேத பரிசோதனையில், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட தடயம் இருந்தது, தெரியவந்துள்ளது.

இதன்பேரில், நிர்மலாவின் வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமிராக்களை வைத்து போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நிர்மலா கொலை செய்யப்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் ஆட்டோ ஒன்று நின்றிருந்ததை போலீசார் கவனித்தனர். அந்த ஆட்டோவில் ரஜினி ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. அதன்பேரில், தீவிர தேடுதல் நடத்தியபோது, நெல்லூர் முத்துகூர் பகுதியில், திங்கள்கிழமை ரஜினி ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ சிக்கியுள்ளது.

அதன் டிரைவர் ராமசாமியை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர், பணம், நகைக்கு ஆசைப்பட்டு, நிர்மலாவை கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். தனிமையில் இருந்ததால், நிர்மலாவை கொன்று, பணம், நகைகளை எளிதில் திருட முயன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, அவரை வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.