ரஜினிகாந்த் வணங்கும் மகா அவதார் பாபாஜி பிறந்த ஊரின் இன்னொரு சிறப்பு தெரியுமா?.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வணங்கும் மகா அவதார் பாபாஜி இமாலயத்தில் இன்றும் வாழ்ந்துவருவதாக சொல்லப்படுவதுண்டு. அந்த பாபாஜி பிறந்த ஊர் பற்றியும், அந்த ஊருக்கு உள்ள இன்னொரு சிறப்பு பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.


அந்த ஊருக்கு பழம்பெயர் வருணபுரி,அது நாயக்க மன்னர்கள் காலத்தில் முத்துக்கிருஷ்ணபுரியானது. இஸ்லாமியர் ஆட்சிக்கு உட்பட்டபோது அதன் பெயர் மொகமத் பந்தர் என்று அழைக்கப்பட்டது.அதன் பிறகு அந்த ஊரில் போர்த்துக்கீசிய வணிகர்கள் குடியேறி அதை போர்ட்ட நோவா ( புதிய துறைமுகம்) என்று அழைத்தார்கள். பறங்கியர் குடியேறியதால் அதை தமிழர்கள் பரங்கிப் பேட்டை என்று வழங்கினார்கள்.

ரஜினிகாந்த் வணங்கும் பாபா பிறந்த ஊர் இதுதான்.இங்கே செய்யப்படும் பூசனி அல்வா புகழ் பெற்றது. இரண்டாம் மைசூர் போரின்போது ஹைதர் அலியும் ,ஆங்கிலத் தளபதி சர் அயர் கூட்டும் போரிட்ட ஊர் இது.இவற்றை எல்லாம் தாண்டி இந்த ஊருக்கு ஒரு சிறப்பு இருக்கிறது.

1830ம் ஆண்டில்,டட்ச் காரர்களால் இங்கே அமைக்கப்பட்ட ஸ்டீல் பிளாண்ட்தான் ஆசியாவின் முதல் நவீன இரும்புத் தொழிற்சாலை. கான்கிரீட் கண்டுபிடிக்கப் படும் முன் ஆற்றுப் பாலங்கள்,ரயில் நிலையங்கள் அமைக்க வார்த்து எடுக்கப்பட்ட இரும்புத் தூண்களையே பயண்படுத்தினார்கள்.

இங்கிலாந்தில் இருந்து கப்பலில் கர்டர்களை ஏற்றி வருவது மிகுந்த செலவு பிடிக்கும் காரியமாக  இருந்திருக்கிறது. இதைப் பயண்படுத்திக் கொண்டு டட்ச் காரர்கள் இந்த இரும்பு ஆலையை கட்டினார்கள்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நிற்கும் இரும்புத் தூண்கள் இங்கே தயாரிக்கப் பட்டவைதான்.அவற்றில் இப்போதும் ' மேட் இன் போர்ட்டோ நோவா' என்கிற எழுத்துக்களை பார்க்கலாம்.அந்த ஆசியாவின் முதல் இரும்புத் தொழிற்சாலை இருந்ததற்கான எந்த அடையாளமும் இப்போது இல்லை.

அந்த பிளாண்ட்டில் பணிபுரிந்து இங்கேயே இறந்துபோன சில டட்ச் காரர்களின் கல்லறைகள் மட்டும் இருக்கின்றன. அதுவும் கவனிப்பார் இல்லாமல் கிராமத்து மக்களின் திறந்தவெளிக் கழிப்பிடமாய் இருக்கும் முட்புதர்களுக்குள் மறைந்து கிடக்கின்றன.