ரஜினிகாந்த் கூட இயல்பாக இருக்கிறார்.. ஸ்டாலின் 4 கேமராக்களை வைத்து கொண்டு அவதூறு பரப்புகிறார் - எஸ்.பி.வேலுமணி

தினமும், நான்கு சுவற்றுக்குள்ளே உட்கார்ந்து கொண்டு 4 கேமராக்களை வைத்து, பின்னிருந்து எழுதி தரும் அறிக்கைகளை பேசி நடிப்பதும், அதனை அறிக்கைகளாக வெளியிட்டு அவதூறுகள் பரப்புவதும்தான் ஸ்டாலினின் மகதான வேலை என்று காட்டம் காட்டியிருக்கிறார், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.


உலகறிந்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட, ஊடகங்களில் இயல்பாகத் தோன்றுகிறார் என்றால், எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலினோ, விக்கு வைத்து விதவிதமாய் சிகை அலங்காரம் செய்து கொண்டு, அருவருப்பு அரசியலை அன்றாடம் தொடர்கிறார்.

நகராட்சி நிர்வாகத் துறையில் சீர்மிகு நகரத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் நடைமுறையில் உள்ள ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகளுக்குட்பட்டு இணையதளம் வழியாக (Online Tender only) ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுகிறது. இந்த ஒப்பந்தப்புள்ளியில் இந்தியாவிலிருந்து எந்தப் பகுதியில் இருந்தும் ஒப்பந்தப்புள்ளி இணையதளம் மூலம் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்க முடியும். 

அவ்வாறு பெறப்பட்ட அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளும் தொழில் நுட்ப தகுதியினை, முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தகுதி பெற்ற ஒப்பந்தாரர்களின் ஒப்பந்தப்புள்ளிகள் ஒப்பந்தப்புள்ளி குழுவால் ஏற்கப்பட்ட பின்பு, பணி ஆணை வழங்கப்படுகிறது. இதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்பதை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உணரவேண்டும்.

பொதுமக்கள் பயன்பாட்டிற்கான திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்படவேண்டும் என்ற தமிழக அரசின் நல்ல நோக்கத்தினால், இத்தகைய திட்டப்பணிகளில் அதிக அனுபவம் பெற்று திட்டங்களை செயல்படுத்தக்கூடிய பெருநகர சென்னை மாநகராட்சியின் முதன்மை தலைமைப் பொறியாளரான எம். புகழேந்தி என்பவர் தஎன். நடராஜன் என்பவரது பணியிடத்தில் அயற்பணி அடிப்படையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டால், அது நல்ல பலன் அளிக்கும் என்பதால் அரசினால் மேற்படி பணியிட மாறுதல் மேற்கொள்ளப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் ஒரே மாதிரியான பணிகளை மேற்கொள்ளும்பொழுது, பணியில் மூத்த, அதிக அனுபவம் வாய்ந்த தலைமைப் பொறியாளர் பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வு ஒருபோதும் விதிகளுக்கு முரணானது அல்ல. 

 அப்பனுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன், பேரனுக்குப் பின் கொள்ளுப் பேரன் என வம்சாவழி அரசியலை முன்வைத்து, இன்று திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலினிடம் கடுகளவு நேர்மை இருக்குமானால், அண்ணா நகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாஷா உள்ளிட்டோரை வைத்து அவர் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ விசாரணையை அவரே கோர வேண்டும். ஸ்பெக்ட்ரத்தில் அவருக்கு இருக்கும் பால்வாவுடனான தொடர்புகள் குறித்து விசாரணையை எதிர்கொண்டு தன்னை அவர் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்று வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.