தாய் மண்ணுக்காக மரணித்த ராணுவ வீரர்களின் பெயர்கள்! உடலில் பச்சை குத்தி நாட்டுப்பற்றில் தெறிக்க விடும் இளைஞர்!

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் பெயர்ப் பட்டியலை ராஜஸ்தான் இளைஞர் உடல் முழுதும் பச்சை குத்திக்கொண்டார்.


பனிப் பொழிவால் மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர் நெடுஞ்சாலை அப்போது தான் திறக்கப்பட்டிருந்தது. அந்தச் சாலை வழியாக கடந்த 14-ஆம் தேதி அணி அணியாக வாகங்களில் பயணத்தைத் தொடங்கிய சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு தங்களை எதிர்கொண்டு வந்துகொண்டிருக்கும் விபரீதம் தெரியவில்லை 

 

விபரீதம் கண்ணுக்கு எதிரில் வந்த போது உரிய நடவடிக்கை எடுக்க நேரம் போதவில்லை. சக தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டு மழைகளுக்கு மத்தியில் வெடிகுண்டுகளுடன் காரில் வந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி ஒரு பேருந்தின் மீது மோதினான்.

 

வெடிகுண்டுகளின் சத்தம் ஓய்வதற்குள் பல எல்லைச்சாமிகளின் உயிர்கள் ஓய்ந்தன. மேலும் பலர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் இறுதியில் தீவிரவாதத்தின் கோரக் கரங்களுக்கு 41 பேரின் ரத்தம் பலியாகக் கொடுக்கப்பட்டது

 

உயிர்வலியே சாதாரணமாகப் போய் விட்ட பின் பச்சை குத்தும் வலியா பெரிது என்கிறார் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞரான கோபால் ஷகாரன். அவர் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்கள், எல்லைச் சண்டைகளில் வீர மரணம் அடைந்த வீரர்கள் உட்பட 71 வீரர்களின் பெயர்களை தன் உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டுள்ளார்

 

பகத் சிங் இளைஞரணியில் உறுப்பினராக உள்ள ஷகாரன், நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செய்யவே அவர்களின் பெயர்களை உடலில் பச்சை குத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தனக்கு மட்டுமன்றி மற்றவர்களுக்கும் தேசப் பற்றை நினைவுறுத்தும் பறையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்

 

ஒருமுறை பச்சை குத்திவிட்டால், நெருப்பில் சுட்டுப் பொசுக்கினால் தவிர அழியாது என்பது போல இந்திய பாதுகாப்புப் படையின் வீர வரலாற்றில் ஷகாரனின் பெயரும் ஒரு ஓரத்தில் இடம் பெற்றாலும் அதுவும் பெருமை தானே.