அமைச்சர் பதவி கேட்கும் ராஜன் செல்லப்பா! கொடுக்கலைன்னா? மிரட்டும் மதுரைக்காரர்!

மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு மந்திரி ஆசை வந்து மாமாங்கம் ஆகிவிட்டது.


அவருக்குத் தெரிந்து சைக்கிள் டோக்கன் கொடுத்துக் கொண்டு இருந்தவரும்,டீக்கடை நடத்தியவருங்கூட அமைச்சர் ஆகிவிட்டார்க்ல்ள். ஆனால்,செல்லப்பாவால் மேயர் பதவியைத் தாண்டி மேலே வரமுடியவில்லை.சரி அம்மாதான் அப்படி,எடப்பாடி எப்படியும் தருவார் என்று நம்பினார் நடக்கவில்லை. கடைசியாக கிருஷ்ணகிரி பாலக்கிருஷ்ண ரெட்டி பதவியை கோர்ட் பறித்தபோது குஷியானார்.

அதுவும் நடக்கவில்லை.ராஜன் செல்லப்பா தினகரன் அணிக்குப் போகப் போகிறார் என்று அவரே கிளப்பி விட்டார் அப்போதும் கிடைக்கவில்லை.இதற்கெல்லாம் காரணம் செல்லூரும் இன்னொரு உள்ளூர் மந்திரி உதயகுமாரும்தான் காரணம் என்று செல்லப்பா புலம்பிக்கொண்டு இருக்கும் போது, ராமநாதபுரம் டாக்டர் மணிகண்டன் பதவியைப் பறித்திருக்கிறார் எடப்பாடி பழநிச்சாமி.

எம்.பிக்கு நின்று தோற்றுப்போன இவரது மகன் ராஜ் சத்யாதான் முன்னாள் அதிமுக ஐ.டி விங்க் தலைவராயிருந்ததால் அடுத்த ஐ.டி அமைச்சர் தானேதான் என்று நம்பி உற்சாகமானார் ராஜன் செல்லப்பா!. ஆனால் செல்லப்பாவின் உள்ளமறியாத எடப்பாடி அந்தத் துறையை செல்லப்பாவின் எதிரியான உதயகுமாரிடம் கொடுத்து விட்டார்.ஆனாலும் மனம் தளராத மதுரை மேயர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறாராம்.

டாக்டர் மணிகண்டன் தென் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடமிருந்து பறித்த பதவியை இன்னொரு தென்மாவட்ட சீனியரான தனக்குத் தருவதுதான் ஞாயம் என்பது அவர் தரப்பு வாதமாம்.இந்த முறையும் நடக்காவிட்டால் 'இரட்டைத் தலைமையை , மக்களும் ஏற்கவில்லை,தொண்டர்களும் ஏற்கவில்லை' என்று எதையாவது பேசி மறுபடியும் மேலிடத்துக்கு அதிர்ச்சி தருவார் என்கிறார்கள் ராஜன் செல்லப்பா ஆதரவாளர்கள்.