ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தாச்சு..! ஆன்மிக சுற்றுப்பயணம் செய்யும் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு..?

இலங்கை அரசின் முன்னாள் அதிபரும் இப்போதைய பிரதமருமான மகிந்த இராஜபக்சே, ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லிக்கு வந்தடைந்தார். அவரை மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே வரவேற்றார்.


பிரதமர் மோடியை இன்று மதியம் இராஜபக்சே சந்திக்கிறார்; முன்னதாக, வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அவரைச் சந்தித்துப் பேசுவார்; குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த்தையும் இராஜப்க்சே சந்திப்பார் என்று வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.  இந்தப் பயணத்தின்போது, பாதுகாப்பு, கடல்பரப்பு பாதுகாப்புக்கான ஒத்துழைப்பு, அரசியல், வர்த்தகம், வளர்ச்சி, பண்பாடு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறும் என்று இலங்கைப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த நவம்பரில் இலங்கை அரசு அதிபர் கோத்தாபய இராஜபக்சே இந்தியாவுக்கு முதல் அரசுமுறைப் பயணமாக வந்தபோது, 45 கோடி டாலர் கடனுதவி அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கடந்த மாதம் இங்கு வந்திருந்தார். பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தே முதன்மையாக விவாதிக்கப்படும் என கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் கொழும்புவுக்குச் சென்றிருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மகிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் என்பது நினைவிற்குரியது.

டெல்லி நிகழ்வுகளை முடித்த பின்னர், இராஜபக்சே தலைமையிலான இலங்கை அரச தூதுக்ஜ் குழுவினர், வாரணாசி, புத்தகயா, சாரநாத், திருப்பதி ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனர். இந்தப் பயணம் ஐந்து நாள்களில் நிறைவடையும். இராஜபக்சேவின் இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் நேற்று மாலையில் வள்ளுவர் கோட்டத்தின் முன்பாக ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கொளத்தூர் மணி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர் தியாகு, இளந்தமிழகம் இயக்கத்தின் செந்தில் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.