ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி விவகாரத்தில், போலீஸார் காட்டிய அலட்சியம் போன்று தமிழகத்திலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் திரிபாதி இன்று தமிழகம் முழுவதும் காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.
போலீஸாருக்கு திடீர் எச்சரிக்கை..! காவலன் கைப்பேசி செயலி அறிவித்த திரிபாதி

அதன்படி உதவி கோரி வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள், தகவல்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தங்களின் கீழ் பணிபுரியும் அனைத்து காவல் ஆளினர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். காவல் ஆளினர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் சம்பந்தமான நடவடிக்கையை காவல் சரக எல்லை, நடைமுறை சிக்கல்கள் போன்ற வரைமுறைகளைத் தாண்டி தாமதமின்றி எடுக்கவேண்டும்.
மேலும், பிரச்சினையின்போது, உடனடியான மற்றும் கூர்மையான செயல்திறனுடன் ஒவ்வொரு காவல் ஆளினரும் செயல்படவேண்டும். தொழில் ரீதியிலான உணர்வுடனும், பொறுப்புணர்வுடனும் செயலாற்றாமை போன்றவற்றால் காவல்
ஆளினர்கள் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக உதவி கோரி, குறிப்பாக பெண்கள், சிறார்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வரும் அழைப்பினை பெறும் காவல் ஆளினர், மற்றவர்களை ஒருங்கிணைத்து மீட்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்பது அவரது கடமையாக கருதப்படுகிறது.
தகவலின் உண்மை நிலை பற்றிய விசாரணையில் ஈடுபட்டு காலம் தாழ்த்தாமல், சம்பந்தப்பட்ட காவல் ஆளினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல வேண்டும். சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கையில், தனது உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். ஹைதராபாத் சம்பவம் போன்றவற்றை தடுக்கும்விதமாக, 'காவலன் கைப்பேசி
செயலி' ஒன்றை தமிழக காவல்துறை உருவாக்கியுள்ளது. இதனைக் கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இத்தகைய செயலி குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் காவல் ஆளினர்களிடையே, குறிப்பாக ஊரகப் பகுதிகளில், ஏற்படுத்த வேண்டும். காவலன் கைப்பேசி செயலி' குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மாநகர காவல் ஆணையர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த செயலி குறித்த விளம்பரத் தட்டிகளை காவல் நிலையங்கள், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து மற்றும் இரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் வைக்க வேண்டும். மேலும், திரையரங்குகளில் விளம்பர ஸ்லைடுகள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பெண்கள் தங்கும் விடுதிகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் படிக்கும் | வேலை செய்யும் | வசிப்பிடங்களுக்கு காவல் அலுவலர்கள் சென்று 'காவலன் செயலி' பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அதனைப் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தி,உபயோகிக்கும் முறை பற்றியும் எடுத்துரைக்க வேண்டும்.
காவலன் கைப்பேசி செயலி'யை பொதுமக்கள் மத்தியிலும், குறிப்பாக பெண்கள், சிறார்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரிடம் பிரபலப்படுத்துவது என்பது அனைத்து காவல் ஆளினர்களும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.