மழை வந்தாச்சு! செய்தி தொடர்பாளர்களுக்கு தடையை நீக்கினார் எடப்பாடி! பரபரப்பு பின்னணி!

தண்ணீர் பஞ்சம் ஒற்றைத் தலைமை விவகாரத்தைத் தொடங்கி, அ.தி.மு.க..வில் வெடிகுண்டு வெடித்த நேரத்தில், யாரும் ஏடாகூடமாக மீடியாவில் பேசி சிக்கலை உருவாக்கிவிடக் கூடாது என்று செய்தி தொடர்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.


எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க. கட்சிக்கு விமர்சனம் தாங்கும் சக்தி இல்லையா அல்லது சரியாக பேசுவதற்கு ஆட்கள் இல்லையா என்று சகல மீடியாக்களும் ஆளும் கட்சியை விமர்சனம் செய்துவந்தனர். பேசுனாலும் தப்பு, பேசாவிட்டாலும் தப்பு என்ற நிலைமை ஏற்பட்டுவிட்டது. அதனால் இன்று செய்தி தொடர்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, மீடியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

இதற்கு காரணம் என்று மழையைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள் விமர்சகர்கள். தண்ணீர் பஞ்சம் கொடுமையாக இருந்த காரணத்தால், என்ன பேசினாலும் விமர்சனம் ஆகிவிடும் என்றுதான் வாய்ப்பூட்டு போடப்பட்டது. இப்போது தொடர்ந்து மழை பெய்துவருவதால், மக்களிடம் தண்ணீர் பற்றிய வெறுப்பு போய்விட்டது. 

இனிமேல், எதைப் பற்றி பேசினாலும் சமாளித்துவிடலாம் என்றுதான் ஆட்களை அறிவித்து இருக்கிறார்கள். இன்று அறிவித்துள்ள பட்டியல் படி, பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா, வைகைசெல்வன், ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், அழகுராஜ், கோவை செல்வராஜ், ஏ.எஸ்.மகேஸ்வரி, ஆ.எம்.பாபு முருகவேக், கோவை சத்யன், நிர்மலா பெரியசாமி, லியாகத் அலிகான், கே.சிவசங்கரி, சசிரேகா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திடீரென தினகரன் கட்சியில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்து சேர்ந்த சசிரேகாவுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைத்திருப்பதை அ.தி.மு.க.வினர் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.