அறிவார்ந்த தமிழ் சகோதரி அனிதாவுக்காக..! சேலத்தில் ராகுல் காந்தி கொடுத்த வாக்குறுதி!

நீட் தேர்வால் எம்பிபிஎஸ் படிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்காக ஒரு உறுதிமொழியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார் ராகுல் காந்தி.


சேலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:- இந்தியாவில் பல்வேறு மொழிகள், இனங்கள், சித்தாந்தங்கள் உள்ளதாக திமுக -  காங்கிரஸ் கூறுகிறது.  தமிழகத்தை ஆர்.எஸ்.எஸ் ஆள வேண்டும் என பாஜக விரும்புகிறது. மோடியின் பிரதமர் அலுவலகம் தமிழகத்தை ஆள நினைக்கிறது.

.கலைஞர் தமிழக மக்களின் குரலாக ஒலித்தவர். கலைஞரின் நினைவிடம் அமைப்பதில் அநீதி இழைக்கப்பட்டதாக ஸ்டாலின் கூறினார். இது கலைஞருக்கு இழைக்கப்பட்ட அவமானம் கிடையாது. ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் ஏற்பட்ட அவமானம். தமிழர்களையும், தமிழ் மக்களையும் மதிக்க தெரிந்தவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கண்ணாடி அறைக்குள் அமர்ந்து தயாரிக்கப்பட்டது இல்ல அது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க கூடிய அறிக்கை. நீட் தேர்வால் அறிவார்ந்த சகோதரி அனிதா இறந்தது போல, வேறு எந்த மாணவியும் இறக்க கூடாது என்பதில் காங் தெளிவாக உள்ளது. காங் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தேவையா?  இல்லையா ? என்பதை மாநில அரசின் விருப்பத்திற்கு விட்டுவிடுவோம்.

ஒரே இரவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி நடவடிக்கை மூலம் திருப்பூர் தொழில் துறையையும்,  காஞ்சிபுரம் பட்டு உற்பத்தியையும் அழித்து விட்டார் மோடி. பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுப்பதற்கு முன் இது தேவையா என யாரிடமாவது கலந்து பேசினாரா மோடி?. நாங்கள் கருத்துப் பரிமாற்றத்தின் மூலமே தீர்வுகளை எட்ட முடியும் என நம்புகிறோம்.

கோடிக்கணக்கான பணத்தை அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. 15 கோடீஸ்வரர்களுக்காக ஆட்சியை நடத்துகிறார் மோடி. டெல்லியில் ஆடையின்றி போராடிய விவசாயிகளை அழைத்து பேசாத மோடி, அனில் அம்பானிக்கும், விஜய் மல்லையா, நீரவ்மோடிக்கும் அன்பை வழங்கி அமர்ந்து பேசுகிறார் மோடி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, குறைந்தபட்ச வரி, எளிய வழி என்ற முறையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.